/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுற்றுச்சுவர் பிரச்னையில் 10 பேர் மீது தாக்குதல்
/
சுற்றுச்சுவர் பிரச்னையில் 10 பேர் மீது தாக்குதல்
ADDED : அக் 04, 2025 04:26 AM
ஆவலஹள்ளி: சுற்றுச்சுவர் பிரச்னையில், ஒரே குடும்பத்தின் 10 பேர் மீது தாக்குதல் நடத்திய பக்கத்து வீட்டுக்காரர், அவரது உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு, கே.ஆர்.புரம் பென்னிகானஹள்ளியில் வசிப்பவர் சீனிவாஸ். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாராயணசாமி.
இருவரின் வீட்டிற்கும் இடையே சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. சுவர் கட்டிய விஷயத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே, 2023ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது.
இருவரும் ஆவலஹள்ளி போலீசில் பரஸ்பரம் புகார் செய்தனர். நீதிமன்றத்தில் முறையிட்டு பிரச்னையை தீர்த்துக் கொள்ளும்படி போலீசார் கூறினர்.
அதன் பின், இரு குடும்பங்களுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. சில தினங்களுக்கு முன்பு, இரு குடும்பங்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, சீனிவாஸ், அவரது மனைவி மஞ்சுளா, உறவினர் ககன் உட்பட 10 பேர், பென்னிகானஹள்ளியில் உள்ள காட்டேரம்மா கோவிலுக்கு சென்றனர்.
சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தபோது, நாராயணசாமி, அவரது உறவினர்கள் சிலர், சீனிவாஸ், குடும்பத்தினரிடம் தகராறு செய்தனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபம் அடைந்த நாராயணசாமி தரப்பினர், எதிர்த்தரப்பினரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பினர். காயம் அடைந்த சீனிவாஸ் உள்ளிட்ட 10 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சீனிவாஸ் அளித்த புகாரில், நாராயணசாமி, உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.