ADDED : மே 25, 2026 10:25 PM

- நமது நிருபர் -
பெங்களூரு ரூரல் நெலமங்களா டவுன் பின்னமங்களாவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான, முக்தி நாதேஸ்வரா கோவில் அமைந்து உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில், லிங்க வடிவத்தில் முக்தி நாதேஸ்வரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மனாக பார்வதி தேவி உள்ளார்.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில்களில், நுழைவாயிலிலோ அல்லது பிரகாரத்திலோ அல்லது கருவறைக்கு வெளியிலோ விநாயகர் சிலை இருப்பது வழக்கம். அதுபோன்று இந்த கோவிலில் கருவறைக்கு வெளியில் விநாயகர் சிலை உள்ளது. விநாயகரை தரிசித்த பின், சிவனை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்கின்றனர்.
அஷ்டதிக் பாலகர்கள் மேலும் கோவிலில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவர், நந்தி தேவர், நவக்கிரகங்கள் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இக்கோவிலில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், கருவறைக்கு மேல் உள்ள கூரையில் 'அஷ்டதிக்' பாலகர்கள் அதாவது எட்டு திசைகளின் காவலர்கள் மற்றும் சிவசக்தி சிற்பங்கள் அழகிய கலைநயத்துடன் செதுக்கப்பட்டு உள்ளன.
கோவிலின் வெளிப்புற கல் சுவர்களில் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி மற்றும் யானை உட்பட பல விலங்கினங்களின் சிற்பங்கள் நேர்த்தியாக செதுக்கப்பட்டு உள்ளன. கோவிலின் நுழைவாயில் பகுதியில் உள்ள, கல்வெட்டில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருப்பது, சோழர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது என்பதற்கு வரலாற்று சான்றாகவும் உள்ளது.
நந்திதேவர் அர்த்த மண்டப மேற்கூரையில் உள்ள சிவசக்தி சிற்பத்தை மனம் உருகி வேண்டி, நந்திதேவர் காதில் சென்று நம்முடைய வேண்டுதல்களை கூறினால், நந்திதேவர் சிவனிடம் கொண்டு சென்று நிறைவேற்றி கொடுப்பார் என்பதும், பக்தர்களின் அசைக்காத முடியாத நம்பிக்கையாக உள்ளது.
மகர சங்கராந்தி அன்று கருவறையில் உள்ள சிவனை, சூரிய பகவான் தரிசிப்பது அதாவது, சூரிய கதிர்கள் விழும் நிகழ்வையும் தரிசிக்கலாம். மகிஷாசூரனை வதம் செய்யும் கோலத்தில் துர்க்கை அம்மன், ஜேஷ்டா தேவி, கங்காரமூர்த்தி சிலைகளும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
ராகுதோஷம், திருமணம் தொடர்பான தடைகள், குடும்பத்தில் நீடிக்கும் நீண்ட கால பிரச்னையால் அவதிப்படுவோர், இந்த கோவிலுக்கு வந்து சிவன், துர்க்கை, சாமுண்டீஸ்வரியை வணங்கி சென்றால், அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
கோவிலின் நடை தினமும் காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் திறந்து இருக்கும்.
மஹா சிவராத்திரி, இங்கு கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை பிரதோஷ நாட்களில் முக்தி நாதேஸ்வரருக்கும், நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தேவ மந்திரங்கள் முழங்க வழிபாடு நடக்கிறது.
பழமையான கோவில் என்பதால், இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
