ADDED : ஜூலை 14, 2026 04:07 AM
மங்களூரு: மங்களூரின் பல்வேறு இடங்களில் பணியாட்கள் போன்று பதுங்கி வாழ்ந்த சிறுவர்கள் உட்பட 11 வங்கதேச நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர்குமார் ரெட்டி நேற்று அளித்த பேட்டி:
மங்களூரின் பல்வேறு இடங்களில், வெளிநாட்டினர் வசிப்பதாக தகவல் வந்தது. தேட துவங்கினோம். மங்களூரு நகரின், உர்வாவில் புதிதாக கட்டடம் கட்டும் இடத்தில், பணியாட்கள் போன்று காணப்பட்ட வங்கதேசத்தின் மூவரும்; மற்றொரு இடத்தில், பணியாட்கள் போன்று எட்டு பேர் இருப்பதை கண்டுபிடித்தோம்.
முகமது இம்ரான் அலி, 17, முகமது கவுசர் அலி, 21, முகமது நுார் அமீன், 34, முகமது நாஹிதுல் இஸ்லாம், 22, முகமது ஹுமாயூன் கபீர், 22, முகமது ரம்ஜான் அலி, 23, முகமது அப்துல் ரஹமான் ராயல், 19, முகமது நோயான், 24, உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான 11 பேரும், வங்கதேசத்தின் டாகா பிரிவின் ராஜஷாஹி மாவட்டத்தின், வெவ்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பது, விசாரணையில் தெரிந்தது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர், மற்ற மாநிலங்களின் இந்திய தொழிலாளர்களுடன், வங்கதேசத்தவரையும் மங்களூருக்கு அழைத்து வந்து கட்டுமான பணிக்கு நியமித்தார்.
வங்கதேச நபர்களை, அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப உள்ளோம். இது தொடர்பான சட்ட உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளோம். கைதானவர்கள் வைத்துள்ள ஆவணங்களை பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
