ADDED : ஜூலை 14, 2026 04:08 AM

பெங்களூரு: கே.பி.எஸ்.சி., தலைவர் சிவசங்கரப்பா சாஹுகர், தொழில் துறை விரிவாக்க அலுவலர் பதவிகளுக்கு சட்டவிரோதமாக தன் இரு மகள்களை தேர்வு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
'தொழில் துறை விரிவாக்க அலுவலர்' பதவிக்கு, தன் இரு மகள்களை சட்டவிரோதமாக தேர்வு செய்ததாக, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பொது சேவை ஆணைய தலைவர் சிவசங்கரப்பா சாஹுகர் குற்றம் சாட்டப்பட்டார்.
இது தொடர்பாக, கர்நாடக லோக்பவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கே.பி.எஸ்.சி., தேர்வு விதிமுறைகளை ஆணைய தலைவர் சிவசங்கரப்பா விதிகளை மீறியுள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிக வருமானம் இருந்த போதும், சாஹுகரின் மகள்களில் ஒருவர், தனது குடும்பத்தின் ஆண்டு வருமானம் 40,000 ரூபாய் மட்டுமே என பொய்யான தகவலை கூறி, வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழை பெற்றுள்ளார்.
கே.பி.எஸ்.சி., தலைவரின் பிள்ளைகளுக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பின் இட ஒதுக்கீட்டிற்கு தகுதி இல்லை.
இது தெரிந்தும், தன் தந்தை கே.பி.எஸ்.சி., தலைவர் என்ற உண்மையை மறைத்து, போலி ஆவணங்கள் மூலம் ஓ.பி.சி., எனும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டையும், 'கிரீமி லேயர்' விலக்கையும் மகள் சட்டவிரோதமாக பெற்று ஆதாயம் அடைந்துள்ளார்.
சிவசங்கரப்பா சமர்ப்பித்த வருமானம், சொத்து விபரங்கள் மற்றும் பிற ஆவணங்கள் அவரது முறைகேடான நடத்தையை தெளிவுபடுத்துகின்றன.
எனவே, ஆணையத்தின் வெளிப்படை தன்மையை காக்க, பாரபட்சமற்ற விசாரணை நடத்த கவர்னர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், அரசியலமைப்பின் 317 (1) பிரிவின் கீழ், இவ்விஷயத்தை உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கும்படி ஜனாதிபதிக்கு, கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.
எனவே, சிவசங்கரப்பா சாஹுகர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தலைவராக, ஆணைய மூத்த உறுப்பினரை நியமிக்கும்படி அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ஆணையத்தின் மூத்த உறுப்பினர் பிரபுதேவாவை, தற்காலிக தலைவராக நியமித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
