திரைப்பட இயக்குநரை கடத்திய நடிகை உட்பட 11 பேர் கைது
திரைப்பட இயக்குநரை கடத்திய நடிகை உட்பட 11 பேர் கைது
ADDED : பிப் 27, 2026 05:27 AM

ஆடுகோடி: திரைப்பட இயக்குநரை கடத்திய வழக்கில், நடிகை உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு ஆடுகோடியை சேர்ந்தவர் அனிஸ், 30. பரவசய ஜீவன் என்ற குறும்படத்தின் இயக்குநர். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், கன்னடத்தில், ஜீவனத பாஷே என்ற பெயரில் படம் இயக்கினார். கன்னட முன்னணி நடிகர் துனியா விஜய் நடிப்பில் வெளியான, பீமா படத்தில் நடித்த ஐஸ்வர்யா, அனிஸ் இயக்கிய படத்திலும் நடித்தார்.
இந்நிலையில், திடீரென படப்பிடிப்புகளை நிறுத்திய அனிஸ், மும்பைக்கு சென்று விட்டார். அதற்கு முன், ஆடுகோடியில் வசிக்கும் தன் நண்பர் ஆசிர்வாத்திடம், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடனை திரும்பக் கொடுக்கவில்லை. ஆசிர்வாத் பல முறை மொபைல் போனில் அழைத்தும் எடுக்கவில்லை.
கடந்த, 9ம் தேதி ஐஸ்வர்யாவிடம் மொபைல் போனில் பேசிய அனிஸ், 'பெங்களூரில் உள்ள என் காரை விற்பனை செய்ய உள்ளேன்' என்று கூறியுள்ளார்.
அனிஸ் தன்னிடம் பேசியது பற்றி ஆசிர்வாத்திடம், ஐஸ்வர்யா கூறி இருந்தார். இவர் மூலம் அனிஸை, கடந்த, 11 ம் தேதி ஆசிர்வாத் பெங்களூரு வரவழைத்தார்.
பின், அனிஸை காரில் கடத்தினர். துமகூரின் மதுகிரிக்கு அழைத்து சென்று, ஒரு வீட்டில் சிறை வைத்து தாக்கினர். அவரிடம் இருந்த 1 லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை பறித்தனர். பின், அவரை நடுவழியில் இறக்கி விட்டு தப்பினர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அனிஸ், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, சில நாட்களுக்கு முன் ஆடுகோடி போலீசில் புகார் செய்தார். ஐஸ்வர்யா, ஆசிர்வாத் உட்பட 11 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடக்கிற து.
