/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வங்கி திருட்டில் 12 பேர் கைது 39 கிலோ தங்கம், ரூ.1.16 கோடி மீட்பு
/
வங்கி திருட்டில் 12 பேர் கைது 39 கிலோ தங்கம், ரூ.1.16 கோடி மீட்பு
வங்கி திருட்டில் 12 பேர் கைது 39 கிலோ தங்கம், ரூ.1.16 கோடி மீட்பு
வங்கி திருட்டில் 12 பேர் கைது 39 கிலோ தங்கம், ரூ.1.16 கோடி மீட்பு
ADDED : ஜூலை 12, 2025 05:18 AM

விஜயபுரா: கனரா வங்கியில் நடந்த திருட்டு தொடர்பாக, அதே வங்கியின் முந்தைய மேலாளர், மூன்று ரயில்வே ஊழியர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 39 கிலோ தங்கம், 1.16 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக, விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் அளித்த பேட்டி:
விஜயபுரா நகரின் மனகோலியில் உள்ள கனரா வங்கியில், நடப்பாண்டு மே 24ல் மர்ம கும்பல் புகுந்து 58.97 கிலோ தங்க நகைகள், 5.20 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இது தொடர்பாக, விசாரணை நடத்த தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
'மாஜி' மேலாளர்
குழுவினர் பல கோணங்களில் விசாரணை நடத்தி, திருட்டு நடந்த வங்கியின் முந்தைய மேலாளர் விஜய்குமார் மிரியாளா, 41, தனியார் நிறுவன ஊழியர் நெரல்லா, 38, சுனில் மோகா, 40, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 10.75 கோடி ரூபாய் மதிப்புள்ள 10.5 கிலோ தங்க நகைகள், தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டன.
இவர்கள் விசாரணையில் தெரிவித்த தகவலின்படி, ஹூப்பள்ளியின் தென் மேற்கு ரயில்வே துறை ஊழியர்கள் பால்ராஜ் மாணிக்கம் யெருகுலா, 40, பாபுராவ் மிரியாளா, 40, சோலோமன்வேஸ்லி பலுகுரி, 40, தார்வாட் அரசு பி.யு.சி., கல்லுாரியின் கவுரவ பேராசிரியர் பீட்டர், 40, தனியார் நிறுவன ஊழியர்கள் ஜோசப், 28, சந்தன் ராஜ், 29, அபு என்ற மோகன்குமார் 42, ஓட்டுநர்கள் இஜாஜ், 34, அனில் மிரியாளா, 30, காவலாளி சூசைராஜ், 44, கள்ளச்சாவி தயாரித்த முகமது ஆசீப் கல்லுாரா, 31, எலக்ட்ரீஷியன் மரியதாஸ், 40, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நண்பர்கள்
கைதான அனைவருமே நண்பர்கள். முதன் முறையாக குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா உட்பட, நாட்டின் பல இடங்களில் நடந்த வங்கி திருட்டுகளை ஆய்வு செய்தனர். சினிமா, சின்னத்திரை தொடர்களை பார்த்து, மூன்று மாதங்களாக வங்கியை திருட திட்டம் வகுத்தனர்.
திருட்டு நடந்தபோது, 58.97 கிலோ தங்க நகைகள் என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் விசாரணையில் 40.7 கிலோ தங்கம் திருட்டு போனது உறுதியானது. இதுதொடர்பாக, வங்கி அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளனர்.
கைதானவர்களிடம் 39 கிலோ தங்கநகைகள், கட்டிகள் மீட்கப்பட்டன. இவர்கள் சில நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து, கோவாவின் மெஜஸ்டிக் ப்ரைடு காசினோவில் டிபாசிட் செய்திருந்த, 1.16 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டது.
கைதானவர்களின் பணம், தங்க நகையுடன், திருடுவதற்கு பயன்படுத்திய ரயில்வே துறைக்கு சொந்தமான சரக்கு லாரி, 4 வாக்கி டாக்கி, இரண்டு காஸ் சிலிண்டர், பர்னிங் கன், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கள்ளச்சாவிகள், ஐந்து கார்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. திருட்டில் தொடர்புள்ள மேலும் சிலரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.