/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.ஆர்.எஸ்., - கபினி அணைகளில் 1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
/
கே.ஆர்.எஸ்., - கபினி அணைகளில் 1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
கே.ஆர்.எஸ்., - கபினி அணைகளில் 1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
கே.ஆர்.எஸ்., - கபினி அணைகளில் 1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
ADDED : ஆக 19, 2025 08:08 AM

பெங்களூரு : கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணையில் இருந்து, 1.20 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறுவதால், காவிரி கரையோரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழையால், நடப்பாண்டு மே முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டின. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மாண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணைக்கு 90,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 80,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அதுபோன்று, மைசூரின் கபினி அணைக்கு, 23,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 23,000 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
நேற்று காலை வரை இரு அணைகளில் இருந்தும் 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. நேற்றிரவு, 1.20 லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால், காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
போக்குவரத்து துண்டிப்பு பீதர், கலபுரகி, யாத்கிர், கொப்பால், ராய்ச்சூர், பல்லாரி மாவட்டங்களிலும் நேற்று கனமழை பெய்தது. துங்கபத்ரா ஆற்றின் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி, பல்லாரி - கம்ப்ளி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
பீதர் அவுராத் தாலுகா போண்டி கிராமத்தில், ஏரி உடைந்து கிராமத்திற்குள் புகுந்த தண்ணீரில் 15 எருமை மாடுகள் அடித்து செல்லப்பட்டன.
ஹாசன் சக்லேஸ்பூர் ஷிராடிகாட் மலைப்பாதையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.
ஹாசன், உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு மாவட்டங்களிலும் நேற்று கனமழை பெய்தது. உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு, ஷிவமொக்கா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.