/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தசரா விளையாட்டு போட்டி கோலாரில் துவக்கம்
/
தசரா விளையாட்டு போட்டி கோலாரில் துவக்கம்
ADDED : ஆக 20, 2025 07:51 AM

கோலார்: கர்நாடக மாநில இளைஞர் அதிகாரம் அளித்தல் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில், கோலார் தாலுகா அளவிலான தசரா விளையாட்டுப் போட்டிகள் கோலாரில் நடந்தது.
விளையாட்டு துறை உதவி இயக்குநர் ஆர்.கீதா துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
பெண்கள் நீளம் தாண்டுதலில் மானசா வி முதலிடத்தையும், சுஷ்மிதா இரண்டாம் இடத்தையும்; வட்டு எறிதல் போட்டியில் அனுஷா டி முதலிடத்தையும், அமராவதி இரண்டாம் இடத்தையும்; உயரம் தாண்டுதலில் அனுஷா 7.63 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தையும், சந்தனா 7.60 மீட்டர் உயரம் தாண்டி இரண்டாம் இடத்தையும்;
ஆண்களுக்கான நீளம் தாண்டு தலில் ஜெய்ஹிந்த் முதலிடத்தையும், நந்தன் இரண்டாவது இடத்தையும் பெற்றனர். உயரம் தாண்டுதலில் ஹேமந்த், ஜெய்ஹிந்த், மோனிஷ் கவுடா ஆகிய மூன்று பேருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. சமமாக தாண்டியதால் முடிவுகள் இன்னும் அறிவிக்கப் படவில்லை .
விளையாட்டு வீரர்களை உற்சாகப் படுத் தி, விளையாட்டுத்துறை உதவி இயக்குநர் கீதா பேசியதாவது:
தாலுகா அளவிலான தசரா விளையாட்டுப் போட்டிகளில் முதல், இரண்டாம் இடங்களை பிடித்தவர்கள்; தனிநபர் பிரிவு மற்றும் குழு சார்பில் முதல் இடத்தை பிடித்தவர் செப்டம்பர் 6, 7ம் தேதிகளில் சர்.எம்.விஸ்வேஸ்வரையா விளையாட்டு மைதானத்தில் நடக்கும் மாவட்ட அளவிலான தசரா விளையாட்டுப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர், மண்டல போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கான தேதி, இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இங்கு வெற்றி பெறுவோர் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப் படுவர்.
தாலுகா அளவிலான விளையாட்டு நிகழ்வில் பங்கேற்க ஆன்லைன் பதிவு அனுமதிக்கப் பட்டுள்ளது. மைதானத்திற்கு வந்தும் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இது ஒரு திறந்த வெளி விளையாட்டு நிகழ்வு. தாலுகா அளவில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
இறுதி போட்டிகள் பயிற்சியாளர் வெங்கடேசன் வழிகாட்டுதலின் கீழ் நடக்கும். பள்ளி கல்வித்துறையை சேர்ந்த முரளி மோகன், நாகராஜ், எஸ்.சவுடப்பா, வெங்கடேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்க பட்டுள்ளனர்.
மற்ற தாலுகாக்களில் விளையாட்டுப் போட்டிகள் ஆக., 18ம் தேதி முல்பாகலிலும், ஆக., 26ம் தேதி மாலுாரிலும், ஆக., 30ம் தேதி சீனிவாசப்பூரிலும் நடக்கும். தடகள போட்டி, கால்பந்து, கொக்கோ, த்ரோபால், கபடி மற்றும் யோகா போட்டிகளும் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.