போக்குவரத்து ஊழியர்களுக்கு 12.50 சதவீதம் சம்பள உயர்வு
போக்குவரத்து ஊழியர்களுக்கு 12.50 சதவீதம் சம்பள உயர்வு
ADDED : மே 12, 2026 11:56 PM
பெங்களூரு: போக்குவரத்து ஊழியர்களுக்கு 12.50 சதவீதம் சம்பள உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இதை ஏற்க மறுத்து, ஊழியர்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
கர்நாடகா அரசின் போக்குவரத்து துறைக்கு உட்பட்ட நான்கு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இந்த கழகங்களில் பணி செய்யும் ஊழியர்கள், குறைந்தபட்சம், 25 சதவீத சம்பள உயர்வை அமல்படுத்த கோரி, பல ஆண்டுகளாக போராட்டம் நடத்துகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு 12.50 சதவீதம் சம்பள உயர்வு அளித்து உத்தரவிட்டு உள்ளது.
இந்த சம்பள உயர்வு, 2025 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து அமலுக்கு வரும் என்றும், புதிய சம்பள திருத்தம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு நற்செய்தி கொடுத்து உள்ளோம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், தங்களுக்கு நற்செய்தி இல்லை என்று போக்குவரத்து ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். 'நாங்கள் கேட்டபடி 25 சதவீதம் சம்பள உயர்வு வேண்டும்' என்கின்றனர்.
நாங்கள் கேட்டபடி சம்பளம் உயர்வு இல்லாவிட்டால், வரும் 20ம் தேதி முதல் போராட்டம் நடத்துவோம் என்கின்றனர். போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.
