/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.2 கோடி கொள்ளை வழக்கு புகார்தாரர் உட்பட 15 பேர் கைது
/
ரூ.2 கோடி கொள்ளை வழக்கு புகார்தாரர் உட்பட 15 பேர் கைது
ரூ.2 கோடி கொள்ளை வழக்கு புகார்தாரர் உட்பட 15 பேர் கைது
ரூ.2 கோடி கொள்ளை வழக்கு புகார்தாரர் உட்பட 15 பேர் கைது
ADDED : ஜூலை 23, 2025 08:43 AM

வித்யரண்யபுரா : ரூபாய் நோட்டுகளை டாலராக மாற்ற எடுத்துச் சென்றபோது, 2 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறிய புகார்தாரர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு கெங்கேரியை சேர்ந்தவர் ஸ்ரீஹர்ஷா, 30. இவர், கடந்த மாதம் 25ம் தேதி வித்யாரண்யபுரா போலீசில் அளித்த புகாரில், 'எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு ஜெர்மனியில் இயந்திரம் வாங்குவதற்காக, 2 கோடி ரூபாயுடன், பெஞ்சமின் என்பவர் நடத்தும் 'மணி எக்ஸ்சேஞ்ச்' நிறுவனத்திற்கு சென்றேன். பணத்தை எண்ணும் போது, நிறுவனத்தில் புகுந்த மர்மநபர்கள், கொள்ளை அடித்துச் சென்றனர்' என்று கூறி இருந்தார்.
பெஞ்சமினிடம் நடத்திய விசாரணையில், 'கொள்ளைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்றார். இதனால், புகார் அளித்த ஸ்ரீஹர்ஷா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
2 கோடி ரூபாயை சிக்பேட்டையில் வசிக்கும், தொழிலதிபரிடம் இருந்து வாங்கியதாக கூறியிருந்தார். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. இதனால் அவரை போலீசார் கண்காணித்தனர்.
ரூ.1.11 கோடி இந்நிலையில், பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், ஸ்ரீஹர்ஷா, பெஞ்சமின், இவர்களின் கூட்டாளிகள் சையது அம்ஜத், ஆதிக், மோசின் கான், சந்திரசேகர், வாசிம், சல்மான் கான், சையது அகிப் பாஷா, வாசிம் என்கிற டிரைவர் வாசிம் உட்பட 15 பேரை, வித்யரண்யபுரா போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், 'ஸ்ரீஹர்ஷாவிடம், சிக்பேட் தொழிலதிபர் ஒருவர், 2 கோடி ரூபாயை கொடுத்து, அதை டாலராக மாற்றித் தரும்படி கேட்டுள்ளார். அந்த பணத்தை ஆட்டையை போட நினைத்த ஸ்ரீஹர்ஷா, தன் நண்பர் பெஞ்சமின், அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை நாடகம் நடத்தியுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து 1.11 கோடி ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டது. நான்கு கார்கள், நான்கு பைக்குகள், இரண்டு ஆட்டோக்கள், எட்டு மொபைல் போன்கள், ஒரு வாள், மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம், மொபைல் போன்கள், வாள், கத்திகள் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை சீமந்த்குமார் சிங் பார்வையிட்டார்.