26 வயது பெண்ணை காதலிக்க எதிர்ப்பு 15 வயது சிறுவன் தற்கொலை
26 வயது பெண்ணை காதலிக்க எதிர்ப்பு 15 வயது சிறுவன் தற்கொலை
ADDED : மே 07, 2026 11:02 PM
ராம்நகர்: தன்னை விட வயதில் மூத்த பெண்ணை காதலித்ததை, பெற்றோர் கண்டித்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.
ராம்நகர் பிடதியின் பூமிகா பிருத்வி லே - அவுட்டில் வசிப்பவர் ரவி நாயக், 44. இவரது மகன் தன்மய் நாயக், 15. இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். பிடதியில் வசிக்கும் ஷோபா, 26, என்ற பெண்ணுடன் நெருங்கி பழகினார். அவரையே திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நடப்பாண்டு மார்ச்சில் சென்னப்பட்டணா ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் ேஷாபாவை வரவழைத்து, சிறுவனுடன் பழக வேண்டாம் என, எச்சரித்தனர்.
ஆனால் வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் போன்ற, சமூக வலைதளங்கள் மூலமாக, தன்மய் நாயக்குடன் ேஷாபா தொடர்பில் இருந்தார். இது தன்மய் நாயக்கின் பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 'உனக்கும், அந்த பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளது. அவருடன் தொடர்பை துண்டித்து கொண்டு, படிப்பில் ஆர்வம் காட்டு' என கண்டித்தனர்.
இதை ஏற்காத தன்மய் நாயக், தற்கொலை செய்து கொள்வேன் என, மிரட்டியுள்ளார். இதனால் வீட்டில் இருந்து வெளியேறி தன் நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். இதையறிந்த ேஷாபா, தன்மய் நாயக்கை திட்டியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இதனால் ஏப்ரல் 24ல் தன்மய் நாயக், விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மே 3ல் உயிரிழந்தார். மகனின் முடிவுக்கு ேஷாபாவே காரணம் என, போலீசாரிடம் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதன்படி போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.
