/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வரும் 4ல் சித்ரகலா பரிஷத்; ஓவிய சந்தை 1,500 கலைஞர்கள் பங்கேற்க வாய்ப்பு
/
வரும் 4ல் சித்ரகலா பரிஷத்; ஓவிய சந்தை 1,500 கலைஞர்கள் பங்கேற்க வாய்ப்பு
வரும் 4ல் சித்ரகலா பரிஷத்; ஓவிய சந்தை 1,500 கலைஞர்கள் பங்கேற்க வாய்ப்பு
வரும் 4ல் சித்ரகலா பரிஷத்; ஓவிய சந்தை 1,500 கலைஞர்கள் பங்கேற்க வாய்ப்பு
ADDED : ஜன 01, 2026 06:56 AM

பெங்களூரு: கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில், பெங்களூரில் வரும், 4ம் தேதி, ஓவியச் சந்தை நடக்கிறது. இதில், பல்வேறு மாநிலங்களின், 1,500 க்கும் மேற்பட்ட ஓவிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
கர்நாடக சித்ரகலா பரிஷத் தலைவர் சங்கர் கூறியதாவது:
கர்நாடக சித்ரகலா பரிஷத், பெங்களூரில் வரும், 4ல் ஓவிய சந்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விஷயங்களின் அடிப்படையில், ஓவிய சந்தை நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, 22 மாநிலங்கள், நான்கு மத்திய ஆட்சி பகுதிகளின், 1,500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
ஆன்லைனில் ஓவிய சந்தையில் பங்கேற்க விரும்பி, 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் 1,500 கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மற்ற கலைஞர்களுக்கு ஜனவரி இறுதி வரை, ஆன்லைன் வழியாக ஓவிய கண்காட்சி நடத்த வாய்ப்பு அளிக்கப்படும். ஓவிய சந்தைக்கு வரும் ஓவிய பிரியர்களுக்கு, தரமான ஓவியங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், திறமையான ஓவிய கலைஞர்களை, வல்லுநர் கமிட்டி தேர்வு செய்துள்ளது.
பெங்களூரின் குமாரகிருபா சாலையில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் ஏற்பாடு செய்யப்படும் ஓவிய சந்தையை, வரும், 4ம் தேதியன்று காலை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.
அன்று காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை ஓவிய சந்தை நடக்கும். கலைஞர்கள் தங்களின் திறமையை காட்ட, வாய்ப்பு அளிப்பதுடன், அவர்கள் வரைந்த ஓவியங்களை விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கலைஞர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிப்பது இல்லை. ஓவிய சந்தையில், கர்நாடக கலைஞர்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். தமிழகம், மேகாலயா, மேற்குவங்கம், ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், லட்சத்தீவு, அசாம் உட்பட பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
1,500 கடைகள் ஓவிய சந்தையில், 1,500 க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும். பொதுப்பிரிவினருக்கு 1,165 கடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 186, மூத்த குடிமக்களுக்கு 87, மாற்றுத்திறனாளி மூத்த குடிமக்களுக்கு ஆறு கடைகள் வழங்கப்படும். ஆண் மற்றும் பெண் கலைஞர்களுக்கு முறையே 67 மற்றும் 33 சதவீதம் கடைகள் திறக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
ஓவிய சந்தைக்கு வருவோரின் வசதிக்காக, மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையம், மந்த்ரி மால் மெட்ரோ நிலையம், விதான்சவுதா மெட்ரோ நிலையங்களில் இருந்து சிவானந்தா சதுக்கம் வரை இணைப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 10 நிமிடத்துக்கு ஒரு பி.எம்.டி.சி., பஸ் இயக்கப்படும். முக்கியமான இடங்களில் குடிநீர் வசதி, உணவு கடைகள், முதலுதவி சிகிச்சை, ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
முக்கியஸ்தர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து செல்ல, எலக்ட்ரிக் வாகனங்கள் வசதி செய்யப்படும்.
ஓவிய சந்தையில் 100 ரூபாய் முதல் பல லட்சம் வரையிலான ஓவியங்கள் இருக்கும். இம்முறை நான்கு முதல் ஐந்து லட்சம் மக்கள் வருகை தரும் வாய்ப்புள்ளது. மூன்று கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

