17 வயது சிறுமிக்கு குழந்தை உறவினர் மீது 'போக்சோ' வழக்கு
17 வயது சிறுமிக்கு குழந்தை உறவினர் மீது 'போக்சோ' வழக்கு
ADDED : மார் 23, 2026 01:41 AM
பெங்களூரு: சாம்ராஜ் நகரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட 17 வயது சிறுமிக்கு, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் போது பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பத்துக்கு காரணமான உறவினர் மீது போக்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின் தேசிபுரா கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த மூன்று நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலி குறையாததால், நேற்று முன்தினம் அவரை, குண்டுலுபேட் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரின் நிலை மோசமாக உள்ளதால், சிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறினர். பெற்றோரும், மகளுடன் ஆம்புலன்சில் புறப்பட்டனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் விபரம் கேட்டனர்.
அதற்கு அவர், அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான சுரேஷ், 46, என்பவர் தான் காரணம் என்று கூறி உள்ளார். உடனடியாக, பேகூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். சுரேஷை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சா வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
