/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' ரத்துக்கு கோரிக்கை!: சபாநாயகர் காதருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு
/
18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' ரத்துக்கு கோரிக்கை!: சபாநாயகர் காதருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு
18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' ரத்துக்கு கோரிக்கை!: சபாநாயகர் காதருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு
18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' ரத்துக்கு கோரிக்கை!: சபாநாயகர் காதருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு
ADDED : ஏப் 22, 2025 05:18 AM

பெங்களூரு: சட்டசபையில் தன் மீது காகிதங்களை கிழித்து எறிந்து அவமரியாதை செய்ததற்காக, பா.ஜ.,வின் 18 எம்.எல்.ஏ.,க்களை ஆறு மாதங்கள் 'சஸ்பெண்ட்' செய்து, சபாநாயகர் காதர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நேற்று சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் சித்தராமையா, பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் காரசாரமாக நடந்தன. கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, தன்னை 'ஹனி டிராப்' செய்ய முயற்சிகள் நடந்ததாக கடந்த மாதம் 20ம் தேதி சட்டசபையில் பகிரங்கமாக கூறினார்.
சபையில் அதிர்ச்சி
இது சபையில், உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த நாள் சட்டசபை கூடியதும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 'ஹனி டிராப்' குறித்து விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டனர்.
'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும்' என முதல்வர் உறுதி அளித்தும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஓயவில்லை. 'ஹனி டிராப்' குறித்து சி.பி.ஐ., விசாரணை கோரினர். ஆனால், இதை அரசு பொருட்படுத்தவில்லை.
ஆத்திரமடைந்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் இருக்கை முன் வந்து சி.பி.ஐ., விசாரணை கேட்டு கோஷமிட்டனர். அப்போது, சில பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பட்ஜெட் புத்தகங்களை கிழித்து சபாநாயகர் மீது வீசினர். இவ்விஷயம் சட்டசபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களான தொட்டனகவுடா பாட்டீல், அஸ்வத் நாராயணா, பைரதி பசவராஜ், விஸ்வநாத், எம்.ஆர்.பாட்டீல், சென்னபசப்பா, சுரேஷ் கவுடா, உமாநாத் கோட்டியான், சரணு சலகர், சைலேந்திர பெல்டல், ராமமூர்த்தி, யஷ்பால் சுவர்ணா, ஹரிஷ், பரத் ஷெட்டி, முனிரத்னா, பசவராஜ் மத்திமோடு, தீரஜ் முனிராஜ், சந்துரு லமானி ஆகிய 18 எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் காதர் ஆறு மாதங்கள் 'சஸ்பெண்ட்' செய்தார்.
இந்த 18 பேரையும் அவைக்காவலர்கள் துாக்கிக் கொண்டு, அவையில் இருந்து வெளியேற்றினர்.
சபாநாயகர், ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கவர்னர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அடுத்து, 'சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்' என, சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தகவல் வெளியாகியது.
அரைமணி நேரம்
இந்நிலையில், நேற்று விதான் சவுதாவில் உள்ள சபாநாயகர் அலுவலத்தில் காதரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்டை ரத்து செய்யும்படி பேச்சு நடத்தினார்.
அவருடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் அஸ்வத் நாராயணா, ராமமூர்த்தி, முனிரத்னா ஆகியோரும் இருந்தனர். இந்த சந்திப்பு அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
பின் அசோக் அளித்த பேட்டி:
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்தது சரியல்லை. இது போன்ற பல சம்பவங்கள் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நடந்துள்ளன. அப்போதெல்லாம் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
நாங்கள் 'ஹனி டிராப்' விவகாரம் குறித்து மட்டுமே குரல் எழுப்பினோம். அதுபற்றி மட்டுமே நாங்கள் விவாதித்தோம். சபாநாயகர் பதவியை அவமதிக்கவில்லை.
எனவே, சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற வேண்டும். சபாநாயகருடன் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை.
எங்களின் நியாயமான கோரிக்கைகளை கவனமாக சபாநாயகர் கேட்டார்.
'இந்த விவகாரம் சட்டசபை வளாகத்திற்குள் நடந்துள்ளதால், சட்டத்துறை அமைச்சருடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்' என, சபாநாயகர் உறுதியளித்துள்ளார். நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்.
மாநிலத்தில் ஏராளமான கொலை, பலாத்கார வழக்குகள் நடக்கின்றன. ஓய்வுபெற்ற டி.ஜி.பி., கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இது, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதை தெளிவாக காட்டுகிறது.
குற்றச்சம்பவங்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்காததால், குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. போலீஸ் துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவாக கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறிய கோரிக்கைகளை சபாநாயகர் பரீசிலித்து வருவதாக கூறியிருப்பது, பா.ஜ., தரப்பில் நீதிமன்றம் செல்வதை தடுப்பதற்கான தற்காலிக முயற்சியாக இருக்கலாம் என, அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.