ADDED : செப் 06, 2026 11:19 PM
பெங்களூரு: விராஜ்பேட்டில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட அரசு மின்சார பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, 18 பயணியர் உயிர் தப்பினர்.
குடகு மாவட்டம், விராஜ்பேட்டில் இருந்து பெங்களூருக்கு நேற்று முன்தினம் மாலை கே.எஸ்.ஆர்.டி.சி., மின்சார பஸ் புறப்பட்டது. மைசூரு - ஹூன்சூர் சாலையில், பிலிகெரே அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, பஸ்சில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், பிரேக் செயலிழந்தது. பின் சக்கரத்தில் இருந்து அடர்த்தியான புகையுடன், தீப்பற்றியது.
ஆபத்தை உணர்ந்த பஸ் ஓட்டுநர், பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தி, பயணியரை உடனடியாக கீழே இறங்கும்படி கத்தினார். மின்சார பஸ் பேட்டரி, உட்புற பொருட்கள் காரணமாக, தீ வேகமாக பரவியது. பஸ் முழுவதையும் சூழ்ந்து கொண்டது. ஓட்டுநரின் சமயோஜிதத்தால், 18 பயணியர் உயிர் தப்பினர்.
இந்த விபத்தால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
