மாயமான கூட்டுறவு அதிகாரியின் கார் வனத்தில் கண்டுபிடிப்பு
மாயமான கூட்டுறவு அதிகாரியின் கார் வனத்தில் கண்டுபிடிப்பு
ADDED : செப் 06, 2026 11:18 PM
ஷிவமொக்கா: பருத்தி கூட்டுறவு சங்கத்தின், தலைமை செயல் நிர்வாகி ஒருவர், மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். இவரது கார் அடர்ந்த வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாவில் வசிப்பவர் மதன், 40. இவர் குடுமல்லிகேவின், பருத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைமை செயல் நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். செப்டம்பர் 4ம் தேதி, தீர்த்தஹள்ளியின் தன் வீட்டில் இருந்து, காரில் பணிக்கு புறப்பட்டார். அதன்பின் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும், அவர் இல்லாததால் போலீஸ் நிலையத்தில், குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசாரும் தேடி வந்தனர்.
இந்நிலையில், காருஹெத்தாரிபுரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, ஜம்பள்ளி அருகில் உள்ள அடர்த்தியான வனப்பகுதியில், நேற்று முன் தினம், இவரின், 'மாருதி ஸ்விப்ட்' கார் நின்றிருந்தது. இதை கவனித்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு சென்று சோதனையிட்ட போது, அது காணாமல் போன மதனுடையது என்பது தெரிந்தது. காருக்குள் சாவி, அவரது மொபைல் போன், கூட்டுறவு சங்கத்தின் கணக்கு புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் எங்கு சென்றார் என, தெரியவில்லை.
குடுமல்லிகே பருத்தி கூட்டுறவு சங்கத்தில், முறைகேடு நடந்துள்ளது. பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, மாளமாருதி போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
விசாரணை நடக்கும் நிலையில், கூட்டுறவு சங்கத்தின் தலைமை செயல் நிர்வாக அதிகாரி மதன் காணாமல் போனது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அவர் போலீசாரின் விசாரணைக்கு பயந்து, வனத்துக்குள் தலைமறைவாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீசாரும், மதனின் குடும்பத்தினரும் வனத்துக்குள் அவரை தேடுகின்றனர்.
