கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியிருந்த வங்கதேசத்தினர் 196 பேர் நாடு கடத்தல்
கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியிருந்த வங்கதேசத்தினர் 196 பேர் நாடு கடத்தல்
ADDED : பிப் 04, 2026 06:33 AM

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோதமாக குடியிருந்த 196 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
இது குறித்து, சட்டசபையில் அவர் பேசியதாவது:
நாடு முழுதும் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள். அவர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை எல்லைப் பாதுகாப்பு படையினரே தடுக்க வேண்டும். கர்நாடகாவில் லட்சக்கணக்கில் வங்கதேசத்தினர் உள்ளனர் என்பது உண்மை கிடையாது.
மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில், சட்டவிரோதமாக குடியிருந்த 196 வங்கேதசத்தினர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். மேலும், 376 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை நாடு கடத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலையவில்லை. காங்., ஆட்சியில் ஊழல் இல்லை. கர்நாடகா போலீசார் திறமையானவர்கள்.
சென்னையை மையமாக கொண்டு செயல்படும் அவதாரா அமைப்பு 125 நகரங்களில் மேற்கொண்ட கணக்கெடுப்பில், பெங்களூரு நகரம் பெண்கள் பாதுகாப்பில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டு உள்ளது. குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்து பிரசாரம் நடந்து வருகிறது. இது, மாணவர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கும்.
இவ்வாறு பேசினார்.
