/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விஜயேந்திராவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ள 2 தொகுதி இடைத்தேர்தல்
/
விஜயேந்திராவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ள 2 தொகுதி இடைத்தேர்தல்
விஜயேந்திராவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ள 2 தொகுதி இடைத்தேர்தல்
விஜயேந்திராவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ள 2 தொகுதி இடைத்தேர்தல்
ADDED : டிச 31, 2025 07:28 AM

- நமது நிருபர் -
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சாமனுார் சிவசங்கரப்பா, எச்.ஒய்.மேட்டி மறைவால், தாவணகெரே தெற்கு, பாகல்கோட் சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும், காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் தீவிர காட்டி வருகின்றனர்.
மறைந்த எம்.எல்.ஏ., க்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட, 'சீட்' கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால், பா.ஜ.,வில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில், கடும் குழப்பமும், பிரச்னையும் உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.c
நான்கு முறை எம்.பி., தாவணகெரே மாவட்ட பா.ஜ.,வில், முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர், முன்னாள் எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா தலைமையில், இரு அணிகள் உள்ளன. கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக உருவான அணியில், சித்தேஸ்வர் முக்கிய தலைவராக உள்ளார். தொடர்ந்து நான்கு முறை எம்.பி.,யாக இருந்த இவர், கட்சி மேலிடத்தின் நம்பிக்கைக்குரியவர்.
கடந்த, 2024 லோக்சபா தேர்தலில், தாவணகெரேயில் சித்தேஸ்வர் மனைவி காயத்ரி போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி, தாவணகெரே வந்து பிரசாரம் செய்தார். ஆனாலும், அவர் தோற்றார்.
சாமனுார் சிவசங்கரப்பாவின் மருமகள் பிரபா மல்லிகார்ஜுன் வெற்றி பெற்றார். சாமனுார் குடும்பத்துடன் உள்ஒப்பந்தம் செய்து கொண்டு, தனது மனைவியை தோற்கடித்ததாக, விஜயேந்திரா மீது கடுப்பில் உள்ளார் சித்தேஸ்வர்.
கனிந்த வாய்ப்பு தாவணகெரே தெற்கில் லிங்காயத் சமூக ஓட்டுகள் அதிகம். ஆனாலும், இங்கு ஒரு முறை கூட, பா.ஜ., வெற்றி பெற்றதில்லை. சாமனுார் சிவசங்கரப்பா மறைவால், இத்தொகுதியில் வெற்றி பெற பா.ஜ.,வுக்கு வாய்ப்பு கனிந்து உள்ளது.
இத்தொகுதியில் கட்சியை வெற்றி பெற வைத்து, மேலிடம் முன் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதே, விஜயேந்திராவின் எண்ணம். அதற்கு கண்டிப்பாக சித்தேஸ்வர் அணி தடை போடும் என்பதால், சித்தேஸ்வருடன் ஒருங்கிணைந்து செல்ல விஜயேந்திரா திட்டமிட்டு உள்ளார்.
சித்தேஸ்வர் கூறும் நபருக்கு, சீட் வழங்கவும் அவர் முன்வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், ரேணுகாச்சார்யா அணி, தாங்கள் கூறும் நபருக்கு தான் சீட் வழங்க வேண்டும் என்று, அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து உள்ளது.
பெரும் சவால் இதுபோல பாகல்கோட்டிலும் முன்னாள் எம்.எல்.ஏ., வீரண்ணா சரந்திமத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து, அவரை வெற்றி பெற வைத்து, தனது பதவியை தக்க வைக்கலாம் என்பது விஜயேந்திராவின் திட்டம். ஆனால், வீரண்ணா சரந்திமத்திற்கு, அவரது குடும்பத்திலும், கட்சிக்குள்ளும் எதிர்ப்பு உள்ளது.
இதனால், இங்கும் வேட்பாளரை தேர்வு செய்வது பெரும் சவாலாக இருக்கும். இந்த இரு தொகுதியிலும், வேட்பாளர்களை தேர்வு செய்து, அவர்களை வெற்றி பெற வைப்பது தான், விஜயேந்திரா முன் தற்போது இருக்கும் பெரிய சவால். இந்த சவாலில் அவர் வெற்றி பெறுவது எளிதல்ல. வெற்றிபெற்றால் அரசியல் எதிர்காலம் பிரகாசிக்கும்.

