தாய் திட்டியதால் 2 மகள்கள் வீட்டை விட்டு வெளியேற்றம்
தாய் திட்டியதால் 2 மகள்கள் வீட்டை விட்டு வெளியேற்றம்
ADDED : மே 20, 2026 03:11 AM
மாண்டியா: தாய் திட்டியதால், கோபித்து கொண்டு இரண்டு சகோதரியர், கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு சென்றதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவின், காளேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ராமசந்திரா. இவருக்கு சுஜாதா, 16, ருக்மிணி, 14, என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஏதோ காரணத்தால் நேற்று முன் தினம், மகள்களை, தாய் கோபத்தில் திட்டினார். இதனால் மனம் நொந்த மகள்கள், கடிதம் எழுதி வைத்துவிட்டு, இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், நேற்று காலை மகள்களை காணாமல் பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். அப்போது அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது.
அதில், 'அம்மா, அப்பா எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் கண் முன்னால் இறப்பதற்கு, எங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, நாங்கள் துாரமாக சென்று சாகிறோம்' என, கூறப் பட்டிருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக ஸ்ரீரங்கப்பட்டணா ஊரக போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தனர். காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரும்படி மன்றாடினர்.
போலீசாரும் சிறுமியரை தேடி வருகின்றனர். மகள்கள் எங்காவது, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, பெற்றோர் அஞ்சுகின்றனர்.
போலீசார் கூறிய தாவது:
பிள்ளைகள் தவறு செய்தால், திட்டுவதும், கண்டித்து அறிவுரை கூறுவதும் பெற்று வளர்க்கும் பெற்றோருக்கு சகஜம். பெற்றோர் திட்டினர் என்பதற்காக, பிள்ளைகள் வீட்டை விட்டு செல்வது தவறு.
மொபைல் போன் கொடுக்கவில்லை, படிக்கும்படி கூறுகின்றனர் என, தவறான முடிவுக்கு செல்வது சரியல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
