/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'தினமலர்' நுாலகத்தில் புத்தகங்கள் படிக்க 20 கி.மீ., துாரம் பயணித்த 2 முதியவர்கள்
/
'தினமலர்' நுாலகத்தில் புத்தகங்கள் படிக்க 20 கி.மீ., துாரம் பயணித்த 2 முதியவர்கள்
'தினமலர்' நுாலகத்தில் புத்தகங்கள் படிக்க 20 கி.மீ., துாரம் பயணித்த 2 முதியவர்கள்
'தினமலர்' நுாலகத்தில் புத்தகங்கள் படிக்க 20 கி.மீ., துாரம் பயணித்த 2 முதியவர்கள்
ADDED : பிப் 09, 2026 05:04 AM

பெங்களூரு: 'தினமலர்' அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள, 'கடல் தாமரை புத்தக பூங்கா' நுாலகத்தில், புத்தகம் படிக்க இரண்டு முதியவர்கள் 20 கி.மீ., துாரம் பயணம் செய்து வந்தனர்.
பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சா லையில் உள்ள, 'தினமலர்' அலுவலகத்தில் 'கடல் தாமரை புத்தக பூங்கா' என்ற பெயரில், கடந்த 6ம் தேதி நுாலகம் திறக்கப்பட்டது.
இதுதொடர்பான செய்தி நேற்று முன்தினம் வெளியானதில் இருந்து, தமிழ் ஆர்வலர்கள், புத்தக பிரியர்கள், தினமலரின் பல ஆண்டு கால வாசகர்கள், அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு நுாலகத்திற்கு எப்படி வர வேண்டும் என்று, தகவல் கேட்க ஆரம்பித்து உள்ளனர். தினமும் ஏராளமானோர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'என்னென்ன புத்தகங்கள் உள்ளன, எப்போது வரலாம்' என்று ஆர்வமாக கேட்கின்றனர்.
திருக்குறள் சிவகங்கை மாவட்டம், நடராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியருமான கண்ணப்பன், 73, பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள மகன் வீட்டிற்கு வந்துள்ளார். இவர், நேற்று காலை தினமலர் அலுவலகத்தின் நுாலகத்திற்கு வந்து, புத்தகங்களை மிக ஆர்வமாக பார்வையிட்டார்.
ஒவ்வொரு புத்தகம் பற்றியும் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டார். எழுத்தாளர் கணேஷ் எழுதிய, 'தமிழ் இலக்கியத்தின் சமூக சிந்தனை', பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனைகளை உள்ளடக்கிய, 'கல்வியே மகாசக்தி' புத்தகங்களை படித்தார். நுாலகம் துவங்கியதற்காக தினமலர் நிர்வாகத்திற்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும், 1,330 திருக்குறள்களும் தனக்கு மனப்பாடமாக தெரியும் என்று கூறினார். திருக்குறளை வாசித்து காட்டினால், திருக்குறளின் எண், அதன் அதிகாரத்தின் தலைப்பையும் பார்க்காமலேயே கூறி அசத்தினார். அந்த அளவுக்கு திருக்குறளை தனது மனதில் பதித்து உள்ளார்.
நினைவுகள் மேலும், 'பெங்களூரில் வசிக்கும் தமிழ் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, திருக்குறள் கற்று கொடுக்க ஆர்வமாக உள்ளேன். தினமலர் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்தால், வாரத்தில் ஒரு நாள் இங்கு வந்து திருக்குறள் கற்று கொடுக்கிறேன்' என்றும் கூறினார். கடந்த 50 ஆண்டுகளாக தினமலரை தவறாமல் படிக்கும் இவர், வார மலரில் வரும் கதைகள் மூலம், மதுரை வானொலி நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தயாரான தனது பால்யகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
ஒயிட்பீல்டில் இருந்து சிவாஜிநகர் 20 கி.மீ., துாரத்தில் உள்ளது. பஸ்சில் தான் பயணம் செய்து வந்தார். வயதான காலத்தில் 20 கி.மீ., துாரம் பயணித்த அனுபவம் பற்றி கேட்ட போது, 'வயது என்பது நம்பர் தான். புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றால், எவ்வளவு துாரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம்' என்று, இளைஞரை போல மிடுக்காக பேசி அசத்தினார். இவரது நடை 20 வயது இளைஞரை போல் உள்ளது.
ஆயுள் சந்தா இவரை தொடர்ந்து, திருப்பத்துார் மாவட்டம், பொம்மிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவரும், பெங்களூரு ஜாலஹள்ளி அருகே பானுவாரா கிராமத்தில் மகன் வீட்டில் வசிப்பவருமான ஆர்.தயாளன், 71 என்பவரும், தினமலர் நுாலகத்திற்கு வந்து, புத்தகங்களை ஆர்வமாக பார்த்தார்.
'உங்கள் நாளிதழில் நுாலகம் ஆரம்பித்த செய்தியை படித்த பின், வந்து உள்ளேன். தமிழை வளர்க்க உங்கள் நிர்வாகம் நல்ல முயற்சி எடுத்து உள்ளது' என்று மனமுவந்து பாராட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், 'கடந்த 45 முதல் 50 ஆண்டுகளாக தினமலர் நாளிதழ் படிக்கிறேன். இங்கிருந்தாலும் சரி, தமிழகம் சென்றாலும் சரி, தினமலர் தான் வாங்குகிறேன்.
எனக்கு தினமும் இங்கு வர வேண்டும் என்று ஆசை தான். ஆனால் எனது வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் 20 கி.மீ., துாரத்திற்கு மேல் உள்ளது. இதனால் வார இறுதி நாளில் கண்டிப்பா க வருவேன்.
'நுாலகத்திற்கு உறுப்பினர்கள் சேவை தேவை; உறுப்பினர்களிடம் இருந்து ஆயுள் சந்தாவாக குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை வசூலிக்கலாம் என்பது எனது கருத்து. இதை பரிசீலித்தால் நன்றாக இருக்கும். வாசிப்பு பசியை போக்க, எங்களை போன்றோருக்கு ஒரு இடம் கிடைத்து விட்டது' என்று அவர் கூறிய போது, அவரது முகத்தில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது.
நுாலகம் தொடர்பாக, 93615 00327, 89715 09091 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

