சின்னசாமி மைதானத்தின் கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்த 2 ஊழியர்கள் கைது
சின்னசாமி மைதானத்தின் கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்த 2 ஊழியர்கள் கைது
ADDED : ஏப் 28, 2026 04:24 AM
கப்பன் பார்க்: சின்னசாமி மைதானத்தின் கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்த, தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 24ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடந்தது. மைதானம், மைதான வளாகம், வெளி பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது 240 கேமராக்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது, 240 கேமராக்களை இணைக்கும் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. மாற்று ஏற்பாடு மூலம், செயல்படாமல் இருந்த 240 கேமராக்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
கேமராக்களை இணைக்கும் ஒயர்களை துண்டித்தது யார் என்று விசாரித்த போது, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மஞ்சுநாத், 37, அப்துல் கலாம், 19 ஆகியோர், ஒயர்களை துண்டித்தது தெரிந்தது. நேற்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், தனியார் நிறுவனம் தங்களுக்கு சரியாக சம்பளம் வழங்காமல் இழுத்தடித்தால், கேமராக்களின் ஒயர்களை துண்டித்து விட்டதாக ஒப்பு கொண்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
கடந்த ஆண்டு சின்னசாமி மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் மைதானத்தை சுற்றி கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. கேமராக்கள் வேலை செய்யாமல் இருந்த போது, மைதானத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால், போலீசாருக்கு அது பெரிய தலைவலியாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
