/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., மாநகராட்சி கமிஷனர் பதவி 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் போட்டி
/
பெங்., மாநகராட்சி கமிஷனர் பதவி 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் போட்டி
பெங்., மாநகராட்சி கமிஷனர் பதவி 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் போட்டி
பெங்., மாநகராட்சி கமிஷனர் பதவி 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் போட்டி
ADDED : ஏப் 26, 2025 08:28 AM

பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், இவரது பதவிக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மணிவண்ணன், மஹேஸ்வர ராவ் இடையே போட்டி எழுந்துள்ளது.
கர்நாடக நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக பணியாற்றும் உமா சங்கர், ஏப்ரல் 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவரது பதவிக்கு பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவரால் காலியாகும் மாநகராட்சி தலைமை கமிஷனர் பதவியை, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மணிவண்ணன், மஹேஸ்வர ராவ் எதிர்பார்க்கின்றனர்.
இதில், மணிவண்ணன், சமூக நலத்துறை முதன்மை செயலராக பணியாற்றுகிறார். மஹேஸ்வர ராவ், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக பதவி வகிக்கிறார்.
தமிழரான மணிவண்ணன், தன் பணித்திறனால் பிரசித்தி பெற்றவர். சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கை தேர்ந்தவர். யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், தயவு, தாட்சண்யம் இன்றி அப்புறப்படுத்துவார்.
இவருக்கு 'டெமாலிஷன் மேன்' என்ற பட்டப்பெயர் உள்ளது. இதற்கு முன் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம், மைசூரு மாநகராட்சி கமிஷனராக இருந்தார். பெஸ்காமிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
பெங்களூரு நிர்வாகம் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால், இவரே பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனராக நியமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். மஹேஸ்வர ராவ், 2018ல் பெங்களூரு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றியவர். விவசாயத்துறை செயலராக இருந்தவர்.
தொழில் மற்றும் வர்த்தக துறை இயக்குனராக பணியாற்றியவர். மாண்டியா, மங்களூரு, பெலகாவி, ஹாசன் மாவட்டங்களின் கலெக்டராகவும் பணியாற்றினார். இவரும் பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் பதவியை எதிர்பார்க்கிறார்.
மணிவண்ணன், மஹேஸ்வர ராவ் ஆகியோரில் ஒருவரை நியமிப்பதில் தாமதமானால், பெங்களூரு மாநகராட்சியின் வருவாய் பிரிவு சிறப்பு கமிஷனர் முனீஷ் மவுத்கில், பொறுப்பு தலைமை கமிஷனராக நியமிக்கப்படும் வாய்ப்புள்ளது.