ADDED : செப் 02, 2026 12:37 AM
பெங்களூரு: வரைவு வாக்காளர் பட்டியலில் பெங்களூரில் 46 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால், ஜி.பி.ஏ.,வின் கீழ் இயங்கும் ஐந்து மாநகராட்சிகளை இரண்டு மாநகராட்சிகளை குறைக்க முன்னாள் மேயர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டது. இதன் கீழ் சென்ட்ரல், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஐந்து மாநகராட்சிகள் பிரிக்கப்பட்டன.
இதன் மூலம் நிர்வாகத்தை எளிதாக மாற்ற முடியும். அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டது.
இதற்கிடையில், கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., எனும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் துவங்கின. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியானது.
இதில், 1 கோடியே 3 லட்சத்து 88,363 வாக்காளர்கள் இருந்த பெங்களூரில், 46 லட்சத்து 88,703 பேர் அதிரடியாக நீக்கப்பட்டு, 56 லட்சத்து 96,990 வாக்காளர்கள் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், 56 லட்சம் வாக்காளர்களுக்கு ஐந்து மாநகராட்சிகள் தேவையா... இரண்டு மாநகராட்சிகள் இருந்தாலே போதுமே என பரவலாக பேசப்பட்டது.
இது குறித்து, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தலைமையில், விகாஸ் சவுதாவில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பெங்களூரின் முன்னாள் மேயர்கள் பங்கேற்றனர்.
அப்போது, முன்னாள் மேயர்கள் பேசியதாவது:
பெங்களூரில் எஸ்.ஐ.ஆர்., பணிகளின் எதிரொலியாக, 46 லட்சம் பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இவர்களில், 30 லட்சம் பேர் கட்டாயமாக நீக்கப்படவே வாய்ப்பு உள்ளது. இதனால், வார்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையிலேயே ஐந்து மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. தற்போது, வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதால், மாநகராட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இதுவே, சரியான முடிவாக இருக்கும். 5 மாநகராட்சிகளை இரண்டாக குறைக்க வேண்டும்.
இரண்டு மாநகராட்சிகளாக இருந்தாலும் எளிதில் நிர்வாகம் செய்யலாம். ஒரு மாநகராட்சியாக இருக்கும் போதே, நாங்கள் சிறப்பாக நிர்வாகம் செய்தோம். ஜி.பி.ஏ., தேர்தல்களை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யவும்.
பெங்களூரு சாலைகளில், 60 சதவீத இடம் வாகனங்கள் நிறுத்தவே பயன்படுகிறது. இதை தடுக்க கடுமையான பார்க்கிங் விதிகளை அமல்படுத்த வேண்டும். நீர், போக்குவரத்து, குப்பை உள்ளிட்ட பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
