பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு புதிதாக 2 வரிக்குதிரை குட்டிகள் வரவு
பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு புதிதாக 2 வரிக்குதிரை குட்டிகள் வரவு
ADDED : மார் 17, 2026 06:04 AM

பெங்களூரு: பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், இரண்டு வரிக்குதிரைகள் இரண்டு பெண் குட்டிகளை ஈன்றுள்ளன. புதிய விருந்தினர்களின் வருகையால், விலங்குகள் நல ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், ஏழு வரிக்குதிரைகள் இருந்தன. கோகிலா, காவேரி என்ற இரு வரிக்குதிரைகள், தலா ஒரு பெண் குட்டியை ஈன்றதால், பன்னரகட்டாவில் வரிக்குதிரைகளின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்து உள்ளது.
ஏற்கனவே பெண் வரி க்குதிரைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், இரு குட்டிகளையும் பூங்கா ஊழியர்கள் தனி கவனம் செலுத்தி பராமரித்து வருகின்றனர். புதிதாக பிறந்த குட்டிகள் ஆரோக்கியமாக உள்ளன.
பூங்கா நிர்வாக அதிகாரி சூர்யா சென் கூறுகையில், ''பன்னரகட்டா பூங்காவில் விலங்குகளின் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் வகையில், விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், சில வரிக்குதிரைகளை, மற்ற பூங்காக்களுக்கு மாற்றும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இத்திட்டத்தால் மற்ற அரிய விலங்குகளை, இங்கே கொண்டு வருவதற்கு வாய்ப்பு அமையும்,'' என்றார்.
வரிக்குதிரை குட்டிகளின் வருகை, பன்னரகட்டா பூங்காவுக்கு உற்சாகத்தை அளித்து உள்ளது. இது சுற்றுலா பயணியருக்கு குதுாகலத்தை அளித்து உள்ளது.
