/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிகாரிகள் தவறுக்கு 2 ஏட்டுகள் 'பலிகடா'
/
அதிகாரிகள் தவறுக்கு 2 ஏட்டுகள் 'பலிகடா'
ADDED : ஏப் 30, 2025 08:15 AM
பெலகாவி: முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் பா.ஜ.,வினர் ஏற்படுத்திய சலசலப்பு சம்பவத்தையடுத்து, காங்கிரஸ் போராட்டம் நடந்த பகுதியில் பணியில் இல்லாத, இரு போலீஸ் ஏட்டுகளை 'சஸ்பெண்ட்' செய்து, வடக்கு மண்டல ஐ.ஜி.பி., சேத்தன் சிங் ராத்தோட் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பா.ஜ., அரசின் காஸ் விலை உயர்வை கண்டித்து, மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் பெலகாவியில் போராட்டம் நடத்தப்பட்டது.
அங்கு முதல்வர் சித்தராமையா பேசிக் கொண்டிருந்தபோது, பா.ஜ., மகளிர் அமைப்பினர், முதல்வருக்கும், காங்கிரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனால் கோபம் அடைந்த முதல்வர், தார்வாட் கூடுதல் எஸ்.பி.,யை அழைத்து அடிக்க கை ஓங்கினார். முதல்வரின் செயலுக்கு பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரித்த வடக்கு மண்டல ஐ.ஜி.பி., சேத்தன் சிங் ராத்தோட், காடே பஜார் போலீஸ் நிலைய ஏட்டு நவுகுடி, கேம்ப் போலீஸ் நிலைய ஏட்டு மல்லப்பா ஹடகினாலா ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரு ஏட்டுகளுக்கும் அன்று காங்கிரஸ் போராட்ட இடத்தில் பணி ஒதுக்கப்படவில்லை என்றும் ஏட்டு நவுகுடிக்கு சன்னம்மா சதுக்கத்திலும்; ஏட்டு மல்லப்பா ஹடகினாலாவுக்கு வேறு இடத்திலும் பணி ஒதுக்கப்பட்டிருந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
'முதல்வர் நிகழ்ச்சிக்கு ஏ.எஸ்.பி., மற்றும் ஏ.சி.பி., அந்தஸ்துள்ள அதிகாரிகள் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
'ஆனால், அதிகாரிகள் செய்த தவறுக்காக, ஏட்டுகளை பலி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம் என்றும் எந்த தவறும் செய்யாத ஏட்டுகளின் மன உளைச்சல்களுக்கு யார் பொறுப்பேற்பர்' என்றும் கண்டனம் எழுந்துள்ளது.