விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த 2 ராணுவ வீரர்கள் கால் முறிவு
விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த 2 ராணுவ வீரர்கள் கால் முறிவு
ADDED : ஏப் 19, 2026 02:52 AM

பல்லாரி: விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிக்கும் போது, இரு ராணுவ வீரர்களின் கால்கள் முறிந்தன. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பல்லாரியில் பி.டி.கிராம பகுதியில், பல ஆண்டுகளாக இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராசூட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த, 417 ராணுவ வீரர்களுக்கு, நேற்று முன்தினம் காலை விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இங்கு வறண்ட நிலங்கள் அதிகளவில் இருப்பதால், பாராசூட்டில் குதிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக, ஆண்டுதோறும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் காலை விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிக்கும் பயிற்சி நடந்தது. அப்போது, மற்ற வீரர்களுடன் குதித்த சின்னராஜ், 25, என்பவர் கீழே விழும் போது கால் எலும்பு முறிந்தது. அதேபோன்று மற்றொரு ராணுவ வீரரின் கால் எலும்பும் முறிந்தது. இருவரும் உடனடியாக பல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ரத்தப்போக்கு அதிகரித்ததால், மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனைக்கு, சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராணுவ வீரரின் பாராசூட்டில் ஏற்பட்ட பிரச்னையா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என, விசாரிக்கப்பட்டு வருகிறது.
