2 கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தேர்வு: பனியன் அணிந்து எழுதிய மாணவரால் பரபரப்பு
2 கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தேர்வு: பனியன் அணிந்து எழுதிய மாணவரால் பரபரப்பு
UPDATED : நவ 16, 2026 12:00 AM
ADDED : நவ 15, 2026 10:34 PM

பெங்களூரு: கர்நாடக அரசின் குரூப் ஏ, பி பிரிவுகளில் காலியாக இருக்கும், 319 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப, இரண்டு கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் நேற்று தேர்வு நடந்தது. முழு கை சட்டை யை கத்திரிகோலால் வெட்ட மறுத்த மாணவர், பனியன் அணிந்து சென்றே தேர்வு எழுதினார்.
கர்நாடகாவில் அரசு பணிக்கான தேர்வுகளை கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த ஆணையம் நடத்திய பல தேர்வுகளில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து, முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க, அரசு பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசின் குரூப் ஏ, பி பிரிவுகளில் காலியாக இருக்கும், 319 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப கே.பி.எஸ்.சி., நேற்று தேர்வு நடத்தியது.
பெங்களூரு, கலபுரகி, தார்வாட், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் 345 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை, 1.40 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.
அரை கை சட்டை
முறைகேடுகளை தடுக்க, அனைத்து தேர்வு மையங்கள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சில இடங்களில் மாணவியர் அணிந்து வந்திருந்த மூக்குத்தி, கம்மல்கள், வளையல்கள் அகற்றப்பட்டன. முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்த மாணவர்கள் நிறுத்தப்பட்டனர். கத்திரிகோலால் முழுக்கை சட்டையை வெட்டி, அரைக்கை சட்டையாக மாற்றப்பட்டது.
பெங்களூரு மல்லேஸ்வரம் அரசு கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு வந்த மாணவர் ஒருவர், முழு கை சட்டை அணிந்து வந்தார். அவரது சட்டையை கத்திரிகோலால் வெட்ட ஊழியர்கள் முயன்றனர். புது சட்டை என்பதால், சட்டையை வெட்ட மாணவர் மறுத்தார்.
தனது சட்டையை வெளியே கழற்றி வைத்துவிட்டு, பனியன் அணிந்தபடியே தேர்வு எழுத சென்றார். அவரை யாரும் தடுக்கவில்லை. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
ஜாமர் கருவிகள்
கலபுரகியில் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர், நேற்று நடந்த தேர்வுக்கு உரிய ஹால் டிக்கெட் எடுத்து வராமல், மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதிய தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை எடுத்து வந்தார். வீட்டிற்கு சென்று ஹால் டிக்கெட் எடுக்க அவருக்கு நேரம் இல்லாததால், தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து விட்டார்.
தேர்வு நடந்த மையங்களில் முதல்முறையாக இரண்டு கண்காணிப்பாளர்கள் மேற்பார்வை பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டதுடன், கூடுதல் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன.
