/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவரின் சலுகை பெற 2 மனைவிகள் மோதல்
/
கணவரின் சலுகை பெற 2 மனைவிகள் மோதல்
ADDED : செப் 12, 2025 06:53 AM
தங்கவயல்: தங்கவயல் நகராட்சி ஊழியருக்குரிய அரசு சலுகைகளை பெற இரண்டு மனைவியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ராபர்ட்சன் பேட்டை 2வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் நாகய்யா; தங்கவயல் நகராட்சி ஊழியர். அண்மையில் காலமானார். அவரது வாரிசு சலுகைகளை கேட்டு, நகராட்சி ஆணையரிடம் பென்சிலம்மா என்பவர் மனுத் தாக்கல் செய்தார். அத்துடன் கணவரின் இறப்பு சான்றிதழையும் இணைத்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து, நாகம்மா என்பவரும் நாகய்யாவின் மனைவி என்று கூறி, வாரிசு சலுகை கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஒரே நபருக்கு இரண்டு மனைவியர் இருப்பது அறிந்து, நகராட்சி ஆணையருக்கு குழப்பம் ஏற்பட்டது.
நேற்று இரு தரப்பினரையும் நகராட்சி ஆணையர் ஆஞ்சனேயலு வரவழைத்தார். பென்சிலம்மாவுக்கு ஆதரவாக நகராட்சி பா.ஜ., கவுன்சிலர் ரமலம்மாவின் கணவர் கண்டலப்பாவும், நாகம்மாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் பிரமுகர் நாகராஜும் வந்திருந்தனர்.
நகராட்சி ஆணையர் முன்னிலையில் இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சியில் தன் செல்வாக்கை பயன்படுத்தி இறப்புச் சான்றிதழை வாங்கியதாக கவுன்சிலரின் கணவர் கண்டலப்பா மீது நாகம்மா தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
தகவலறிந்து ராபர்ட் சன் பேட்டை போலீசார் அங்கு வந்து, இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர்.
''இப்பிரச்னையை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளுங்கள்,” என கூறி, இரு தரப்பினரையும் நகராட்சி ஆணையர் ஆஞ்சனேயலு அனுப்பி வைத்தார்.