சாய்ந்து விழுந்த 'லிப்ட் பக்கெட்' 2 தொழிலாளர்கள் பரிதாப பலி
சாய்ந்து விழுந்த 'லிப்ட் பக்கெட்' 2 தொழிலாளர்கள் பரிதாப பலி
ADDED : ஜூன் 22, 2026 03:33 AM
பல்லாரி: கட்டடத்தின் மீது சென்று கொண்டிருந்த 'லிப்ட் பக்கெட்' திடீரென சாய்ந்ததில் இரண்டு தொழிலாளர்கள் விழுந்து உயிரிழந்தனர்.
பல்லாரி மாவட்டம், குடிதினி நகரின், ஹெச்.எல்.சி., காலனியில் புதிதாக தண்ணீர் தொட்டி கட்டப்படுகிறது. நேற்றும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். தண்ணீர் தொட்டி கட்டடத்தின் மேற்புறத்தில் பணிகள் செய்வதற்காக, லிப்ட் பக்கெட் மூலம் ஹுலப்பா, 27, நீலப்பா, 35, ஆகியோர் மேலே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, லிப்ட் பக்கெட், ஒரு பக்கமாக சாய்ந்ததால், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். 60 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், இருவரின் தலை, இருதயம், கை, கால்களில் பலத்த அடிபட்டது.
அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தனர். இறந்த இருவரும், குருகோடு தாலுகாவின் திம்மலாபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள்.
கட்டட கட்டுமான தொழிலாளர்களுக்கு, ஹெல்மெட், பாதுகாப்பு பெல்ட் உட்பட, தேவையான பாதுகாப்பு சாதனங்கள் வழங்குவதில், அலட்சியம் காட்டிய ஒப்பந்ததாரர் பசவராஜ், சூப்பர்வைசர் காதர் பாஷா மீது, குடிதினி போலீஸ் நிலையத்தில் நேற்று வழக்கு பதிவாகியுள்ளது.
