முதல்வருக்கு வாழ்த்து கோஷம் எரிச்சல் அடைந்த கார்கே
முதல்வருக்கு வாழ்த்து கோஷம் எரிச்சல் அடைந்த கார்கே
ADDED : ஜூன் 22, 2026 03:33 AM
பெங்களூரு: முதல்வர் சிவகுமாரின் பெயரை கூறி கோஷமிட்டதால், கட்சி தொண்டர்கள் மீது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோபமடைந்து திட்டினார்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்த விழாவில், கர்நாடக காங்கிரஸ் புதிய தலைவராக ஹரிபிரசாத், பதவி ஏற்றார். மேடையில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், முதல்வர் சிவகுமாரை வாழ்த்தி, 'டிகே... டிகே' என, கோஷமிட்டனர்.
இதனால் எரிச்சல் அடைந்த மல்லிகார்ஜுன கார்கே, 'இத்தனை பேர் மட்டும் கோஷம் போட்டால், நாடு முழுதும் உங்கள் கையில் கிடைத்து விடுமா... யூஸ்லெஸ் பெல்லோஸ். அனைவரும் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் மேடை இது. இங்கு தனி நபரை பூஜிப்பது நடக்காது. நபர் முக்கியம் அல்ல.
'மற்றவர்கள் எதற்காக கட்சிக்கு வந்தனர். குப்பை கூட்ட வந்தனரா... காங்கிரஸ் பலருக்கு வாய்ப்பு அளித்தது. காங்கிரசால் அவர்களுக்கு சக்தி வந்தது. அமைதியாக பேசுவதை கேளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன்' என எச்சரித்தார்.
அப்போது, சிவகுமாரும் இருந்தார். கட்சி தொண்டர்களிடம், கார்கே கோபமாக பேசிய வீடியோ, பரவி வருகிறது.
