'கிக் ஸ்கூட்டரிங்'கில் கலக்கும் 2 வயது குழந்தை ஆகிரா
'கிக் ஸ்கூட்டரிங்'கில் கலக்கும் 2 வயது குழந்தை ஆகிரா
ADDED : ஜூலை 23, 2026 11:07 PM

- நமது நிருபர் -
சிறு குழந்தைகள் மழலை மொழியில் பேசி, அனைவரையும் மகிழ்விப்பர். தத்தி தத்தி நடந்து மனதை கொள்ளை கொள்வர். ஆனால், 2 வயது கூட நிரம்பாத பெண் குழந்தை, கிக் ஸ்கூட்டரிங் மற்றும் நீச்சலில் சாதனை செய்கிறார். உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
தரையில் காலால் உதைத்த படி, தட்டையான பகுதியில் நின்றபடி, ஸ்கூட்டரில் செல்வது போல செல்வது தான், கிக் ஸ்கூட்டரிங் விளையாட்டு. இந்த விளையாட்டில் பொதுவாக, 2 - 5 வயது குழந்தைகள் தான் ஈடுபடுவர்.
பெங்களூரை சேர்ந்தவர் அமன் தீப் சிங். இவரது மனைவி பிரியங்கா. இவர்களின் மகள் ஆகிரா. பொதுவாக, 2 வயது குழந்தைகள் நடப்பதே பெரிய விஷயம். ஆனால் ஆகிராவுக்கு இன்னும் இன்னும், 2 வயது கூட ஆகவில்லை; 20 மாதங்களே ஆகின்றன.
ஆனால் கிக் ஸ்கூட்டரிங்கில், நான்கு உலக சாதனைகளை படைத்து, அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவர் கிக் ஸ்கூட்டரிங் செல்லும் வேகத்தை பார்த்தால், குழந்தை விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படும். ஆனால், ஆகிரா எந்த பயமும் இல்லாமல் கிக் ஸ்கூட்டரிங் செய்கிறார்.
பொதுவாக குழந்தைகள் கீழே விழுந்தால், அழுவது சகஜம். ஆனால் இவர் கீழே விழுந்தாலும், எழுந்து நின்று சிரிக்கிறார். மீண்டும் அதே வேகத்தில், கிக் ஸ்கூட்டரிங் செய்து அசத்துகிறார்.
ஆகிரா, 14 மாத குழந்தையாக இருந்த போது, தன் உறவினரின் மகன், கிக் ஸ்கூட்டரில் வேகமாக செல்வதை கண்டார்.
தானும் அதை செய்ய விரும்பினார். மகளின் விருப்பத்தை தெரிந்து கொண்ட பெற்றோர், மகளை ஊக்கப்படுத்தினர். கிக் ஸ்கூட்டரில் பயிற்சி பெற துவங்கினார். வீட்டின் சுற்றுப்பகுதிகளில், கிக் ஸ்கூட்டரில் சுற்றி வந்தார். இந்த ஆர்வம், அவரை உலக சாதனையாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.
இவர், நான்கு உலக சாதனை மற்றும் மூன்று இந்திய சாதனை சான்றிதழ்களை பெற்றுள்ளார். கிக் ஸ்கூட்டரிங் மட்டுமின்றி, நீச்சலிலும் சாதனை செய்கிறார். இன்னும் சரியாக பேசவும் வராத சின்னஞ்சிறு குழந்தை, இந்த அளவுக்கு சாதனை செய்வது ஆச்சர்யமளிக்கிறது.
ஆகிராவின் பெற்றோரும், விளையாட்டு பின்னணி உள்ளவர்கள். தந்தை அமன்தீப் சிங், கால் பந்து விளையாட்டு வீரர். தாய் பிரியங்கா கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனை. மகளுக்கும், விளையாட்டில் ஆர்வம் இருப்பதை அறிந்து, ஊக்கப்படுத்துகின்றனsர். மகளின் சாதனைக்கு இவர்களே முக்கிய காரணம்.
