இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 2 வயது குழந்தை
இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 2 வயது குழந்தை
UPDATED : நவ 16, 2026 12:00 AM
ADDED : நவ 15, 2026 07:52 PM

– நமது நிருபர் –: பன்ட்வாலை சேர்ந்த, 2 வயது 9 மாதங்களே ஆன பெண் குழந்தை, சமஸ்கிருதத்தில் ஐந்து ஸ்லோகங்கள், நான்கு பக்தி பாடல்களை பாடி, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகாவில் உள்ள தைபாலாவை சேர்ந்த யாதவ குலால் – விஜயலட்சுமி தம்பதியின், 2 வயது ஒன்பது மாதங்களே ஆன மகள் பிரத்யா குலால். எஸ்.வி.எஸ்., வித்யாகிரி பள்ளியில் நர்சரி படித்து வருகிறார்.
சரியாக பேசவே முடியாத இந்த வயதில், பிரத்யா குலால், சமஸ்கிருத ஸ்லோகங்கள், கன்னடம், துளு மொழிகளில் பக்தி பாடல்களை தன் இனிமையான குரலில் பாடுகிறார். இதற்காக, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
பிரத்யா குலால் தாய் விஜயலட்சுமி கூறியதாவது:
எங்கள் வீட்டில் தினமும் ஸ்லோகங்களைப் பாராயணம்; வெள்ளிக் கிழமைகளில் பஜனைகள் நடத்துவோம். பிரத்யாவின் அக்கா சானித்யா, 7ம் வகுப்பு படிக்கிறார். அவளுக்குத் தினமும் ஸ்லோகங்களை பாராயணம் செய்வதை, பிரத்யா கவனிப்பார்.
தைபாலாவில் உள்ள உள்ளூர் ஸ்ரீ ராம பஜனை மந்திர் கோவிலில் புதன்கிழமை தோறும் எங்கள் மகளை அழைத்துச் செல்வோம். ஒன்றரை வயதிலேயே அவள் தானாகவே பஜனைகளை மெட்டுக்கு ஏற்ப முணுமுணுக்கத் துவங்கிவிட்டாள்.
எங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் அவளின் நினைவாற்றலை அங்கீகரித்து, அவளை ஊக்குவித்தனர். இதன் மூலம், கணபதி, ஸ்ரீ ராமர், பத்ரகாளி, சாரதா தேவியை போற்றும் பக்தி பாடல்கள், கன்னடம், துளு மொழிகளில் நான்கு பக்தி பாடல்களைத் தெளிவாகப் பாடி, இன்று, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தந்தை யாதவ் குலால் கூறுகையில், ‘‘வீட்டின் பாரம்பரியம், பக்திமயமான சூழலே குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். எந்தவித அழுத்தமும் இன்றி, அவள் தன் சொந்த ஆர்வத்தின் காரணமாக ஏராளமான பஜனைகளையும், பாடல்களையும் கற்றுக்கொண்டாள். இந்த சாதனைக்காக அவள் தேசிய அங்கீகாரம் பெற்றிருப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம்,’’ என்றார்.
