UPDATED : நவ 16, 2026 12:00 AM
ADDED : நவ 15, 2026 07:52 PM

– நமது நிருபர் –
எத்தனை கஷ்டங்கள் எதிர் கொண்டாலும், மனம் தளராமல் தைரியத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதற்கு, அஹல்யா பாய் சிறந்த எடுத்துக்காட்டு. இவரது வாழ்க்கை துவண்டு கிடக்கும் பெண்களுக்கு, ஒரு பாடமாக அமைந்துள்ளது.
பெங்களூரின், காந்தி பஜாரில் பிறந்து வளர்ந்தவர் அஹல்யா பாய். சிறு வயதில் இருந்தே, இவருக்கு சமையலில் ஆர்வம் அதிகம். இவரது தாயும் சமையலில் கை தேர்ந்தவர். தன் சமையல் நுணுக்கங்களை மகளுக்கும் சொல்லிக் கொடுத்தார்.
‘மவுனமாக அமர்ந்து பொழுது போக்குவதற்கு பதில், ஏதாவது செய்து வாழ்க்கையில் முன்னேற, முதல் அடியை எடுத்து வை. அதுவே உன்னை இழுத்து கொண்டு, முன்னே செல்லும்’ என, மகளை ஊக்கப்படுத்தினார்.
அதன்படி, வீட்டிலேயே முறுக்கு, நிப்பட்டு உட்பட, பல்வேறு தின்பண்டங்களை தயாரித்து விற்க துவங்கினார். தாயுடன் சேர்ந்து பல அலுவலகங்களுக்கு சென்று தின்பண்டங்களை விற்பனை செய்தார். அதன் பின் சப்பாத்தி, கிழங்கு மசியல் செய்ய துவங்கினார்.
விஜயநகரில் வசிக்கும் சாந்தலா என்பவரின் வீட்டில் குழந்தை பிறந்திருந்தது. அவரது வீட்டில் சமையல் செய்ய யாரும் இருக்கவில்லை. சாதம், சப்பாத்தி, காய்கறி மசியல் தயாரித்து அனுப்பும்படி, அஹல்யா பாயிடம் கேட்டுக்கொண்டார்.
அன்று துவங்கிய உணவு வினியோகிக்கும் தொழில், இன்றும் தொடர்கிறது. பெங்களூரின் மல்லேஸ்வரம், சுப்ரமண்ய நகர், சீராம்புரம் உட்பட, பல்வேறு பகுதிகளின், 50 வீடுகளுக்கு உணவு வினியோகிக்கிறார்.
அஹல்யா பாயிடம் மற்றொரு சிறப்பும் உள்ளது. இவர் சமையலுக்கு வெங்காயம், பூண்டு பயன்படுத்துவது இல்லை. சம்பிரதாயமான உணவு முறையை பின்பற்றும் குடும்பங்களுக்கு, இது வசதியாக உள்ளது. பலரும் இவரிடம் உணவு ஆர்டர் செய்கின்றனர். வீட்டில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள், ஒருவர் மட்டுமே வசிப்போருக்கு தினமும் சமையல் செய்து கொள்வது, கஷ்டமாக இருக்கலாம். இத்தகைய வீடுகளுக்கு, அஹல்யா பாய் உணவு வினியோகிக்கிறார்.
சமையல் கலையில் சிறந்து விளங்கும் இவரது வாழ்க்கையில், பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். இவரது மகள், பி.காம்., பட்டதாரி. மிகவும் திறமைசாலி. சங்கீதம் மற்றும் சமையலில் ஆர்வம் காட்டினார். ஆனால், காதல் தோல்வியால், மகளை இழந்தார்.
மகளின் இறப்புக்கு பின், வாழ்க்கையே வேண்டாம் என்ற விரக்தி நிலைக்கு சென்றார். அதன்பின் மனதை தேற்றி கொண்டு, தொழிலில் ஈடுபட்டார். மகள் இறந்த மூன்றாவது நாளே, சட்னி பொடி ஆர்டரை வினியோகிக்க, சமையல் அறைக்கு வந்தார். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டியிருந்த வாடிக்கையாளருக்கு, சரியான நேரத்தில் சட்னி பொடியை கொண்டு சேர்த்தார்.
குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் உதவியோடு, தொழிலை கவனிக்கிறார். இவரது வாழ்க்கை மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாக உள்ளது.
அஹல்யா பாய் கூறியதாவது:
அழுதபடி அமர்ந்திருந்தால், எவ்வளவு நேரம் அழ முடியும். நமது கடமைகளையும் செய்ய வேண்டும். வாழ்க்கையில் எதிர் கொள்ளும் கஷ்டங்களை கண்டு, பயப்பட கூடாது. சமாளித்து முன்னோக்கி நடக்க வேண்டும்.
சமையல் தொழில் துவங்க விரும்புவோர், முதல் நாளே பெரிதாக துவக்க வேண்டும் என்பது இல்லை. சட்னி பொடி, இட்லி, தோசை போன்ற சிறிய சிற்றுண்டிகளில் இருந்து ஆரம்பிக்கலாம்.
சில நேரங்களில் உணவு விற்பனையாகாவிட்டால், நஷ்டம் என நினைக்காமல், நமக்கு தெரிந்தவர்களுக்கு கொடுக்கலாம். பயப்படாமல் திடமான மனதோடு பணியாற்றினால், நாம் முன்னேறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
