/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
16 நாட்களில் 2,000 கி.மீ., சைக்கிள் பயணம்
/
16 நாட்களில் 2,000 கி.மீ., சைக்கிள் பயணம்
ADDED : ஜன 11, 2026 05:42 AM

'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொப்பாலை சேர்ந்த இளைஞர், கர்நாடகாவில் இருந்து பஞ்சாபிற்கு, 16 நாட்களில் 2,000 கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதித்துள்ளார்.
கொப்பால் மாவட்டம், ஹிரேசிந்தோகி கிராமத்தை சேர்ந்தவர் சிவராயப்பா நீரலோட்டி, 30. இவர் பெட்டகேரி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சைக்கிள் ஓட்டுவதில் விருப்பம் உடைய இவர், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த சில ஆண்டுகளாக, பஞ்சாபின் போர்பந்தர், ஒடிசாவின் கட்டாக்கிற்கு சைக்கிளில் பயணித்து உள்ளார்.
இது தொடர்பாக தன் நண்பர்கள், குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி பயணித்தும் வந்து உள்ளார். அதுபோன்று, 2025ல், 'துாய்மை இந்தியா திட்டம்' குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அவருக்கு தோன்றியது. இதையடுத்து, 2025 டிசம்பர், 25ம் தேதி, தனது கிராமத்தில் இருந்து புறப்பட்டு, சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த ஊரான, பஞ்சாப் மாநிலம் கட்கர் காலன் கிராமத்துக்கு சென்று வெற்றிகரமாக தன் பயணத்தை முடித்துள்ளார்.
தன் சைக்கிள் பயணம் குறித்து, சிவராயப்பா நீரலோட்டி கூறியதாவது:
பயணத்தை துவக்கிய முதல் நாளில், 90 கி.மீ., பயணித்தேன். அதன்பின், ஒவ்வொரு நாளும் எனது வேகத்தை, 130 முதல் 145 கி.மீ., என அதிகரித்து வந்தேன். விஜயபுரா, சோலாப்பூர், மஹாராஷ்டிராவின் மலை தொடர்கள் வழியாக பயணம் செய்வது சவாலாக இருந்தது. கர்நாடகாவின் வடமாவட்டங்களில் இன்னும் பரவலாக குளிர் நிலவியது. இதுவே, வடமாநிலங்களில் குளிரின் தாக்கம் 10 டிகிரிக்கும் குறைவாக இருந்தது.
நாட்கள் செல்லச்செல்ல, ஒவ்வொரு மாவட்டம், மாநிலங்களை தாண்டும் போதும், குளிர் 7, 8 டிகிரி செல்ஷியஸ் என, குறைந்து கொண்டே வந்தது. ஆனாலும், இலக்கை அடைய வேண்டும் என்ற என் விருப்பத்தை கைவிடவில்லை. நான் செல்லு ம் வழியில், என் எண்ணத்தை பாராட்டி, பலரும் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
மொத்தம், 20 நாட்களில் கட்கர் காலன் கிராமத்திற்கு சென்றடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தேன். ஆனால், 16 நாட்களில் சென்றடைந்தேன். இது, எனக்கு மேலும் ஊக்கத்தை தந்தது. எனக்கு ஒத்துழைப்பு தந்த, ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

