/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஷராவதி நீர்தேக்கத்தில் 2.12 கி.மீ., பாலம் இன்று திறப்பு; ஷிவமொக்கா மக்களின் 60 ஆண்டு கனவு நனவாகிறது
/
ஷராவதி நீர்தேக்கத்தில் 2.12 கி.மீ., பாலம் இன்று திறப்பு; ஷிவமொக்கா மக்களின் 60 ஆண்டு கனவு நனவாகிறது
ஷராவதி நீர்தேக்கத்தில் 2.12 கி.மீ., பாலம் இன்று திறப்பு; ஷிவமொக்கா மக்களின் 60 ஆண்டு கனவு நனவாகிறது
ஷராவதி நீர்தேக்கத்தில் 2.12 கி.மீ., பாலம் இன்று திறப்பு; ஷிவமொக்கா மக்களின் 60 ஆண்டு கனவு நனவாகிறது
ADDED : ஜூலை 14, 2025 05:29 AM

ஷிவமொக்கா: ஷராவதி நீர்தேக்க பகுதியில், புதிதாக கட்டப்பட்டு உள்ள 2.12 கி.மீ., துார கேபிள் பாலத்தை, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று திறந்து வைக்கிறார்.
ஷிவமொக்கா மாவட்டம், சாகர் தாலுகா சிக்கந்துாரில் உள்ள சிக்கந்துார் சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு சாகரில் இருந்து செல்வோர் அம்பரகோட்லு என்ற இடம் வரை வாகனத்தில் சென்று, அங்கு இருந்து ஷராவதி நீர்தேக்கத்தில், 'லாஞ்சர்' எனும் படகில் பயணித்து செல்ல வேண்டும். லாஞ்சரில் வாகனங்களை ஏற்றி செல்லும் வசதியும் உள்ளது.
இது தவிர அம்பரகோட்லுவில் இருந்து நீர்தேக்கத்தின் எதிர்கரையில் உள்ள கலசவள்ளி, துமரி, சிக்கந்துார் உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும், முக்கிய போக்குவரத்தாக லாஞ்சர் மட்டுமே இருந்தது.
மழைக்காலத்தில் ஷராவதி நீர்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ, கோடை காலத்தில் தண்ணீர் குறைத்து லாஞ்சர் தரைதட்டும் நிலை ஏற்பட்டாலோ, லாஞ்சர் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடும்.
அனுகூலம்
இதனால், கிராமங்களுக்கு இடையிலான இணைப்பு துண்டிக்கப்படும். இந்த வேளையில், 80 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. அம்பரகோட்லு - கலசவள்ளி இடையில், நீர்தேக்க பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள், கடந்த 60 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர்.
பாலம் கட்டுவதன் மூலம் சாகர், பைந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும். உள்ளூர் மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பாக்கு உற்பத்தியாளர்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்றும் மக்கள் கூறி வந்தனர்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எம்.பி.,யாக இருந்த போது லோக்சபாவில் பேசும் போது அம்பரகோட்லு - கலசவள்ளி இடையில், பாலம் கட்டுவதன் அவசியம் குறித்தும் எடுத்து பேசினார். மத்திய அமைச்சர்களை சந்தித்தும் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு அம்பரகோட்லு - கலசவள்ளி இடையில் 2.12 கி.மீ., துாரத்திற்கு, கேபிள் பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இந்த பணிக்காக 473 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. டெண்டர் நடைமுறைகள் முடிந்து கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் பாலம் கட்டும் பணிகள் துவங்கின.
தற்போது பணிகள் முடிந்து உள்ளன. 2.12 கி.மீ.,யில், 17 பிரமாண்டமான துாண்களுடன் பாலம் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு துாணின் இடைவெளி 470 மீட்டர். பாலத்தின் இரு புறமும் நடந்து செல்லும் வசதிகள்; சிறப்பான மின் விளக்கு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
மக்கள் மகிழ்ச்சி
கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதியின் நடுவில் கட்டப்பட்டு உள்ள முதல் நீளமான பாலம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலத்தின் திறப்பு விழா, சாகர் டவுனில் உள்ள நேரு மைதானத்தில் இன்று மதியம் 12:00 மணிக்கு நடக்கிறது.
விழாவில், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, புதிய பாலத்தை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். பல ஆண்டு எதிர்பார்ப்பு நிறைவேறி இருப்பதால் அம்பரகோட்லு - கலசவள்ளி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முதல்வர் புறக்கணிப்பு
பள்ளிக்கல்வி அமைச்சரும், ஷிவமொக்கா மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மது பங்காரப்பா கூறுகையில், ''அம்பரகோட்லு - கலசவள்ளி பாலம் திறப்பு நிகழ்ச்சிக்காக அடித்த அழைப்பிதழில், முதல்வர் சித்தராமையா, எனது பெயர், அரசியல் கட்சி தலைவர்கள் பெயர்களை போட்டு உள்ளனர். ஆனால், முறைப்படி எங்களுக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. எல்லாம் நானே செய்தேன் என்று ஷிவமொக்கா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா தம்பட்டம் அடித்து கொள்கிறார். பாலம் திறப்பு விஷயத்தில் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை,'' என்றார்.
பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில், ''அம்பரகோட்லு - கலசவள்ளி பாலம் திறப்பு நிகழ்ச்சிக்கு, முதல்வருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு தான் அழைப்பு விடுத்தனர். ஆனால் அதற்கு முன்பே இண்டியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், முதல்வருக்கான சுற்றுப்பயணம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாலம் திறப்பு நிகழ்ச்சிக்கு அவர் வர மாட்டார். நான் பங்கேற்கிறேன்,'' என்றார்.