தங்கவயலில் மூன்று மாதங்களில் 2,207 பேர் நாய் கடியால் பாதிப்பு
தங்கவயலில் மூன்று மாதங்களில் 2,207 பேர் நாய் கடியால் பாதிப்பு
ADDED : ஏப் 14, 2026 06:05 AM
தங்கவயல்: தங்கவயலில் தெருநாய்கள் கடிக்கு மூன்று மாதத்தில் 2,207 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளனர்.
கோலார் மாவட்டத்தின் தெரு நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்தவாறு உள்ளது. இம்மாவட்டத்தில் தெருநாய்கள் 15,000க்கும் அதிகமானோரை கடித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, கோலார் மாவட்ட நிர்வாகம் செயல் பட துவங்கியுள்ளது. ஏ.பி.சி., எனும் விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தீவிரப் படுத்தி உள்ளது.
உணவுக்காக அலைந்து திரிவதால், பொதுமக்களை தெருநாய்கள் கடிக்கின்றன. இதனால் கோலார் மாவட்டத்தில் கோலார், பங்கார்பேட்டை மாலுார், தங்கவயல் நகராட்சிகளில் அனைத்து வார்டுகளிலும் தனி இடத்தை தேர்வு செய்து, தெரு நாய்களுக்கு உணவளிக்க முற்பட்டுள்ளது. உணவு சாப்பிட வரும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தங்கவயலில் தெருநாய்கள் இல்லாத தெருக்களே இல்லை . எல்லா இடங்களிலும் கும்பல் கும்பலாக திரிகின்றன.
நடப்பாண்டில் தங்கவயல் அரசு பொது மருத்துவமனையில் தெருநாய்கள் கடித்ததால், ஜனவரியில் 611; பிப்ரவரியில் 625; மார்ச்சில் 971 என மூன்று மாதத்தில் மட்டும் 2,207 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமின்றி ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை, உரிகம்பேட்டை பகுதிகளிலும் தனியார் நர்சிங் ஹோம், கிளினிக்குகளிலும் தெருநாய்கள் கடிக்கு சிகிச்சை பெற்று உள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஸ்ரீதர் கூறுகையில், ''தெருநாய்களை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இறைச்சி கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக் கூடாது என எச்சரித்துள்ளோம். நாய்களுக்கு உணவளிக்க குறிப்பிட்ட இடம் தேவை என்பதால் வார்டுக்கு ஒரு இடம் அமைக்கப் பட்டுள்ளது. அந்த இடத்தில் உணவை வழங்கலாம். நகராட்சியும் தெருநாய்கள் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் உணவு, தண்ணீர் வழங்கும்,'' என்றார்.
