கனமழையால் வேரோடு சாய்ந்த 226 மரங்கள்; 100க்கும் மேற்பட்ட வாகனங்களும் சேதம்
கனமழையால் வேரோடு சாய்ந்த 226 மரங்கள்; 100க்கும் மேற்பட்ட வாகனங்களும் சேதம்
ADDED : ஏப் 30, 2026 11:56 PM

பெங்களூரு: பெங்களூரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பெய்த 11 செ.மீ., மழையால், நகர் முழுதும் 226 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. இதனால், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள், மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
பெங்களூரில் நேற்று முன்தினம் திடீரென கோடை மழை வெளுத்து வாங்கியது. மாலை, 5:00 மணி முதல் 6:00 மணி வரை, சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், நகரின் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 6 வயது சிறுமி உட்பட ஏழு பேர் இறந்தனர்.
சூறாவளி காற்று, ஆலங்கட்டி மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நகரின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மரக்கிளைகளும் முறிந்து வாகனங்கள் மீது விழுந்தன. மரங்கள் விழுந்ததில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ, கார்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடும் சேதம் அடைந்தன.
11.1 செ.மீ., இந்த கனமழை குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரே நாளில் பெங்களூரில் அதிகபட்சமாக 11.1 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. 25 ஆண்டுகளுக்கு பின், ஏப்ரல் மாதத்தில் நேற்று (முன்தினம்) ஒரே நாளில் 11.1 செ.மீ., மழை பெய்து உள்ளது. அடுத்த நான்கு நாட்களும், பெங்களூரில் மழை இருக்கும். இதனால் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது' என்றனர்.
இந்நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, ஜி.பி.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் பெய்த கனமழையால், ஜி.பி.ஏ.,வுக்கு உட்பட்ட 5 மாநகராட்சிகளில், 226 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து உள்ளன. 623 மரங்களின் கிளைகள் முறிந்து உள்ளன. வேரோடு சாய்ந்த மரங்கள், மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
மழையால் 62 இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, 3 இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 105 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது.
தேங்கிய தண்ணீரை மின்மோட்டார் மூலம் அகற்றி வருகிறோம். 186 மின்கம்பங்கள் சாய்ந்தன. 36 டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்தன.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
10 பேர் பலி சுற்றுச்சுவர் இடிந்து ஏழு பேர், மின்கம்பியை மிதித்து ஒருவர் என நேற்று முன்தினம் மாலை எட்டு பேர் இறந்த நிலையில், மழையால் மேலும் இரண்டு பேர் இறந்து உள்ளனர்.
ஜே.பி.நகர் 15வது குறுக்கு தெருவில் உள்ள, மினி வனப்பகுதி முன்பு உள்ள சாலை வழியாக, ரகு, 33 என்பவர் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார். மழையால் அறுந்து கிடந்த, மின் ஒயரை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கி பலியானார்.
சாம்ராஜ்பேட் ஆசாத் நகரில் பெய்த கனமழைக்கு, வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் சீட் உடைந்து, அதன் மீது வைக்கப்பட்டிருந்த கல் தலையில் விழுந்ததில் மஞ்சுநாத், 45 என்பவர் உயிரிழந்தார். இதன் மூலம் மழைக்கு இறந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
