/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
25 நாட்கள் 'டிஜிட்டல்' கைது மூதாட்டியிடம் ரூ.83 லட்சம் மோசடி
/
25 நாட்கள் 'டிஜிட்டல்' கைது மூதாட்டியிடம் ரூ.83 லட்சம் மோசடி
25 நாட்கள் 'டிஜிட்டல்' கைது மூதாட்டியிடம் ரூ.83 லட்சம் மோசடி
25 நாட்கள் 'டிஜிட்டல்' கைது மூதாட்டியிடம் ரூ.83 லட்சம் மோசடி
ADDED : நவ 08, 2025 11:00 PM
பெங்களூரு: தனியாக வசித்து வரும் 71 வயது மூதாட்டியை 'டிஜிட்டல்' கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, 25 நாட்கள் அவரை முடக்கி 83 லட்ச ரூபாயை கொள்ளை அடித்த சைபர் குற்றவாளிகளை போலீசார் தேடுகின்றனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 71 வயது மூதாட்டி, சவுதி அரேபியாவில் பணியாற்றினார். லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்தார்.
இதை வங்கிகளில் சேமித்து வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருக்கு வந்த இவர், மத்திகெரேவில் தன் மகனுடன் வசித்தார். குடும்ப பிரச்னை காரணமாக, தன் குடும்பத்துடன் மகன் தனியாக சென்றுவிட்டார். மூதாட்டி மட்டும் தனியாக வசிக்கிறார்.
அக்டோபர் 5ம் தேதி, அறிமுகமில்லாத எண்ணில் இருந்து, மூதாட்டிக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய கிருதி சர்மா, 'நான் டெலிகாம் துறையில் இருந்து பேசுகிறேன்.
'உங்களின் மொபைல் எண்கள் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத பணம் பரிமாற்றம் வழக்கில், உங்களின் மொபைல் எண் சேவையை துண்டிக்கிறோம்' என கூறினார்.
அதன்பின் நீரஜ் தாகூர் என்ற நபர், மூதாட்டியை தொடர்பு கொண்டு, தன்னை டில்லியை சேர்ந்த போலீஸ் அதிகாரி என, அறிமுகம் செய்து கொண்டார்.
'சட்டவிரோத பணம் பரிமாற்றம் வழக்கில், உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். மூன்று மாதங்கள், உங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்போம், அதுவரை நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். யாருடனும் பேசக்கூடாது' என எச்சரித்துள்ளார்.
தன்னுடன் பேசுபவர் உண்மையான போலீஸ் அதிகாரி என, பயத்தில் மூதாட்டியும் நம்பினார்.
அதன்பின் தினமும் அவருக்கு போன் செய்து மிரட்டிய நீரஜ் தாகூர், விசாரணை பெயரில் மூதாட்டியின் வங்கிக் கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டார்.
அவரது மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்த 83 லட்சம் ரூபாயை, கொஞ்சம் கொஞ்சமாக தன் கணக்கு மாற்றிக்கொண்டார். நவம்பர் 1ல், அவரது கணக்கில் இருந்த பணம் முடிந்தது.
இதையறிந்த நீரஜ் தாகூர், மூதாட்டியிடம், 'உங்களை டிஜிட்டல் கைதில் இருந்து விடுவித்துள்ளோம்' என, கூறினார். அன்று முதல் போன் வருவதும் நின்றது.
பல ஆண்டுகள் உழைத்து, தன் எதிர்காலத்துக்கு சேர்த்து வைத்திருந்த 83 லட்சம் ரூபாயை, சைபர் குற்றவாளிகளிடம் பறிகொடுத்த மூதாட்டி, செலவுக்கு பணம் இல்லாமல், மகனின் நண்பரிடம் உதவி கேட்டார். அப்போது நண்பர், 'என்ன நடந்தது' என, மூதாட்டியிடம் விசாரித்தபோது, டிஜிட்டல் கைதாகி பணத்தை இழந்ததை கூறினார்.
அதன்பின் நண்பரே, மூதாட்டியை சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, புகார் அளிக்க செய்தார். போலீசாரும் கிருதி சர்மா, நீரஜ் தாகூர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.
இதுகுறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது:
டிஜிட்டல் கைது என்பது, சைபர் குற்றவாளிகளின் மோசடி வலையாகும். போலீஸ் அதிகாரிகள் யாரும், வீடியோ கால் செய்து, விசாரணைக்கு அழைக்க மாட்டார்கள். கைது செய்யவும் முடியாது.
யாராவது போலீஸ் அதிகாரி பெயரில், போன் செய்தால், தாமதிக்காமல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பணம் பறிபோனதும், சைபர் உதவி எண் 1930ல் தொடர்பு கொண்டு, புகார் அளிக்க வேண்டும். அப்போதுதான் பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை, வங்கிக் கணக்கில் முடக்கி உரியவரிடம் சேர்க்க, உதவியாக இருக்கும். தாமதமானால் எதுவும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

