/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மார்க்கெட்டுக்கு 272 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம்
/
மார்க்கெட்டுக்கு 272 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம்
ADDED : பிப் 05, 2025 06:54 AM

பெங்களூரு: 'ஏ.பி.எம்.சி., மார்க்கெட் அமைப்பதற்காக 272 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்' என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெங்களூரின் மாகடி சாலை ஸ்ரீகந்தகாவல், ஹீரோஹள்ளியில் ஏ.பி.எம்.சி.,மார்க்கெட் அமைப்பதற்கு இரண்டு இடங்களில் 272 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, 1999ம் ஆண்டு வருவாய் துறைச் செயலர் உத்தரவிட்டார்.
ஆனால், '272 ஏக்கர் நிலத்தையும் பொதுத்தொண்டுக்காக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். நிலத்தை கையகப்படுத்தும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, ஜமான்லால் பஜாஜ் சேவா அறக்கட்டளையின் தலைவர் ராகுல் பஜாஜ் உட்பட எட்டு பேர் 2000ம் ஆண்டு தனித்தனி ரிட் மனுக்களை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நியமிக்கப்பட்ட நீதிபதி கிருஷ்ணா தீட்சித், சில ஆண்டுகளாக விசாரித்து வந்தார்.
தொண்டு
நேற்று நடந்த விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் உதய் ஹொல்லா வாதாடுகையில், ''பொதுத் தொண்டுக்காக அறக்கட்டளை பயன்படுத்தி வரும் நிலங்களை அரசு கையகப்படுத்தப்படுத்த கூடாது. வளர்ச்சி பணிகளுக்காக வேறு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கிரண், ஏ.பி.எம்.சி., வக்கீல் ராகவன் ஆகியோர் வாதாடுகையில், 'கையகப்படுத்தப்பட அரசு உத்தரவிட்ட நிலத்தில் ஏ.பி.எம்.சி., மார்க்கெட் கட்டினால், பல விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும். இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணா தீட்சித் பிறப்பித்த உத்தரவு:
மெகா ஏ.பி.எம்.சி., என்பது சமூக உணர்வுள்ள திட்டம். விவசாயம் நமது உயிர்நாடி என்று, உச்சநீதிமன்றம் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு கூறி உள்ளது. ஏ.பி.எம்.சி.,யை கட்டும் நோக்கில் நிலத்தை கையகப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயன் அளிக்கும். அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பின்படி உள்ளது.
இழப்பீடு
நிலம் கையகப்படுத்தும் செயல்பாட்டில், நிலத்தை இழக்கும் விவசாயி அல்லது பாதிக்கப்படுபவர் இழப்பீடு பெற ஒரு முறை மட்டுமே ஆர்வம் காட்டினால் போதும் என, நாட்டின் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு சட்ட அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ராமசந்திரன் கூறி உள்ளார். இந்த வழக்கில் மனுதாரர் மூன்று இழப்பீடு கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இழப்பீடு பெறும் அவரது ஆர்வத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
இதனால் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் தரப்பு வாதங்களை நிரூபிக்க மனுதாரர்கள் ஒரு தீர்ப்பை கூட முன்வைக்க தவறிவிட்டனர். எனவே மனுதாரர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
நிலத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து செலுத்தப்படும் இழப்பீடு வட்டியுடன் கூடுதலாக, ஆண்டுக்கு 12 சதவீதம் கூடுதல் வட்டியை மூன்று மாதங்களுக்குள் அரசு செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.