/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2வது திருப்பதி சிர்சி மஞ்சுகுனி கோவில்
/
2வது திருப்பதி சிர்சி மஞ்சுகுனி கோவில்
ADDED : செப் 16, 2025 05:04 AM

விஷ்ணு கையில் சங்கு, சக்கரம், கதம் வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். நாட்டிலேயே சங்கு, சக்கரம், கதம், வில், அம்புடன் வேட்டைக்கு செல்லும் விஷ்ணுவை மஞ்சுகுனியில் மட்டுமே பார்ப்பீர்கள்.
உத்தர கன்னடா மாவட்டம், சிர்சியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ள மஞ்சுகுனியில், ஸ்ரீ வெங்கடரமணா மற்றும் பத்மாவதி தாயார் அருள்பாலிக்கின்றனர்.
வேட்டைக்கு புறப்பாடு புராணங்கள்படி, திருப்பதியில் இருந்து வேட்டைக்காக தனது பரிவாரங்களுக்குடன் சுவாமி வெங்கடரமணா புறப்பட்டார். அவ்வாறு புறப்பட்டவர், மஞ்சுகுனியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள கிலிஹூண்டியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
பிற்காலத்தில் இங்கு திருமல யோகி தவம் செய்து கொண்டிருந்தபோது, ஞான திருஷ்டியால், அப்பகுதியில் வெங்கடரமண சிலை இருப்பதை கண்டறிந்தார். அச்சிலையை எடுத்து, தற்போது உள்ள மஞ்சுகுனியில் பிரதிஷ்டை செய்தார்.
இதில் விசேஷம் என்னவென்றால், வழக்கமாக விஷ்ணு தனது கையில் சங்கு, சக்கரம், கதம் வைத்திருப்பார். ஆனால், நாட்டிலேயே இக்கோவிலில் தான், சங்கு, சக்கரம், வில், அம்பு பிடித்தபடி அருள்பாலிக்கிறார்.
இன்று வரை சிலை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் சிலை இருந்ததற்கான சிறியளவில் பள்ளமும்; திருமல யோகியின் கால்தடமும் பதிந்து உள்ளதை காணலாம்.
கோடை காலத்தில் இப்பகுதி பனிமூட்டத்துடன் காணப்படுவதால், மஞ்சுகுனி என்று அழைக்கப்படுகிறது. திருப்பதியில் இருந்து வேட்டைக்கு வெங்கடரமணர் வந்ததால், இக்கோவிலை சிக்க திருப்பதி என்றும் அழைக்கின்றனர்.
இக்கோவில் விஜயநகர பேரரசர் ஆட்சி காலத்தில் வாதிராஜா கட்டி உள்ளார். கோவிலில் உள்ள மண்டபத்தின் துாண்களில், விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் செதுக்கப்பட்டு உள்ளன. அதுபோன்று, ராமரின் வரலாறும் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன.
வெங்கடரமணரை தரிசித்த பின், மண்டபத்தில் இருந்து வெளியே வந்தால், வலது புறத்தில் பத்மாவதி தாயார் சன்னிதி அமைந்து உள்ளது. இவரை, 'ஞான தாயி' என்றும் அழைக்கின்றனர்.
அதுபோன்று சிவன், விநாயகரும் ஒரே சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் சிறியளவில் சக்கர தீர்த்தம் என்ற தெப்பக்குளமும் அமைந்து உள்ளது.
மவுன பூஜை இன்னொரு முக்கியமான விஷயம், வழக்கமாக கோவில்களில் பூஜையின் போது மந்திரங்கள் ஓதப்படும், கோவில் மணி அடிக்கப்படும். ஆனால் இக்கோவிலில் மவுன பூஜை நடத்தப்படுகிறது.
மார்ச் மாதம் மஞ்சுகுனி ரத உத்சவம் விமர்சையாக நடத்தப்படும். உத்தர கன்னடா மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் இவ்விழா கொண்டாடப்படும். இவ்விழாவுக்கு மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இக்கோவிலில் இருந்து சிறிது துாரம் நடந்து சென்றால், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகிலேயே மிகப்பெரிய தெப்பக்குளம் அமைந்து உள்ளது. வெங்கடரமணா கோவில் திருவிழாவின் போது இங்கு தெப்ப உத்வசமும் நடக்கிறது.
- நமது நிருபர் -