ரூ.3 கோடி தங்க நகைகளுடன் தலைமறைவான 3 பேருக்கு வலை
ரூ.3 கோடி தங்க நகைகளுடன் தலைமறைவான 3 பேருக்கு வலை
ADDED : மே 20, 2026 10:46 PM
மல்லேஸ்வரம்: ஜுவல்லரி கடை விற்பனை மேலாளரை ஏமாற்றி, 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளுடன் தப்பிய, மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பெங்களூரு நகரத்பேட்டில், 'மேத்தா ஜுவல்லரி' என்ற பெயரில் நகை கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் மேத்தாவை, கடந்த 10ம் தேதி மொபைல் போனில் ஒருவர் தொடர்பு கொண்டார்.
தன் பெயரை பரேஷ் சோனி என்று கூறி அறிமுகம் செய்தார். 'மல்லேஸ்வரத்தில் நகை கடை நடத்துகிறேன்; உங்கள் ஜுவல்லரியில் நகை டிசைன்கள் சூப்பராக இருக்கும் என்று நண்பர்கள் கூறினர்.
'உங்களிடம் இருந்து, 3 கிலோ தங்கம் வாங்க விரும்புகிறேன். என் நிறுவனத்திற்கு தங்க நகைகளை எடுத்து வாருங்கள்' என, மேத்தாவிடம், பரேஷ் சோனி கூறினார்.
இதையடுத்து, கடந்த 16ம் தேதி ஜுவல்லரியின் விற்பனை பிரிவு மேலாளர் மகேந்திரகுமார் ஜெயினிடம், ஒரு பையில் 3 கிலோ நகைகளை கொடுத்து மேத்தா அனுப்பி வைத்தார்.
பரேஷ் ஜெயின் கூறிய இடத்திற்கு நகைகளுடன் மகேந்திர குமார் ஜெயின் சென்றார்.
அந்த இடத்தில் இருந்த மேஜை மீது நகைகளை வைத்து காண்பித்தார். இதில் ஒரு, 1 கிலோ 850 கிராம் நகைகளை பரேஷ் ஜெயின், அவரது நண்பர்கள் ராமசந்திரா, ஷியாம் ஆகியோர் எடுத்து ஒரு பையில் போட்டனர்.
பக்கத்து அறைக்கு பையை எடுத்து சென்று, நகைகளை மொபைல் போனில் புகைப்படம் எடுத்து வருவதாக கூறி இருவரும் அங்கிருந்து சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வரவில்லை.
அதிர்ச்சி அடைந்த மகேந்திர குமார் ஜெயின், பக்கத்து அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு யாரும் இல்லை. பரேஷ் ஜெயினிடம் கேட்ட போது, 'நகைகளை எடுத்து கொண்டு இருவரும் தப்பி விட்டனர்.
'நான் அவர்களை கண்டுபிடிக்கிறேன்' என கூறி, அவரும் நைசாக அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் மல்லேஸ்வரம் போலீசில் மகேந்திர குமார் ஜெயின் புகார் செய்தார். அந்த புகாரில் திருடப்பட்ட நகைகள் மதிப்பு, 3 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களை மஹாராஷ்டிரா, ராஜஸ்தானில் தேடி வருகின்றனர்.
