'பாஸ்' என்று கூறியதால் கொலை: தலைமறைவான 3 பேர் கைது
'பாஸ்' என்று கூறியதால் கொலை: தலைமறைவான 3 பேர் கைது
ADDED : மே 24, 2026 11:23 PM

மாண்டியா: மதுபான கடையில் 'பாஸ்' என கூறிய பிரச்னையால், இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து, மாண்டியா எஸ்.பி., ஷோபா ராணி கூறியதாவது:
மாண்டியா மாவட்டம், மத்துாரின் ஹொன்னலகெரே கிராமத்தை சேர்ந்தவர் சுனில். கடந்த 19ம் தேதி, தன் நண்பர்களுடன் அதே கிராமத்தில் உள்ள தீபா பாரில் மது அருந்தி கொண்டிருந்தார். அங்கு, அஜ்ஜஹள்ளி கிராமத்தை சேர்ந்த நிஷாந்த், கார்த்திக், ரவி ஆகியோர் மது குடித்து கொண்டிருந்தனர்.
மது குடித்த பின், கேஷியரை, 'பாஸ்' என்று நிஷாந்த் அழைத்தார். இதை கேட்ட சுனில், அவர், எந்த ஏரியாவுக்கு பாஸ் என்று கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.
அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி, வெளியே அனுப்பி வைத்தனர். வெளியே சென்றதும் மீண்டும் இரு தரப்பினருக்கும் வாய் தகராறு முற்றி, கைகலப்பானது.
இதனால் கோபம் அடைந்த நிஷாந்த், தன் காரில் இருந்த அரிவாளால், சுனிலை வெட்டினார். அங்கிருந்து மூவரும் தப்பி சென்றுவிட்டனர். படுகாயம் அடைந்த சுனில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
வழக்கு பதிவு செய்த மத்துார் போலீசார், தலைமறைவாக இருந்த மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், நிஷாந்த், அசோக் என்பவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த பணத்தை திருப்பி தரும்படி, அசோக் நெருக்கடி கொடுத்தார்.
அசோக்கை மிரட்டுவதற்காக, அரிவாள் வாங்கிய நிஷாந்த், காரில் வைத்திருந்தார். இதற்கிடையில், மது கடையில் ஏற்பட்ட தகராறில், சுனிலை, நிஷாந்த் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
