/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அசுத்த குடிநீரால் 3 பேர் பலி: யாத்கிரில் சோகம்
/
அசுத்த குடிநீரால் 3 பேர் பலி: யாத்கிரில் சோகம்
ADDED : ஜூலை 07, 2025 11:04 PM

யாத்கிர்: அசுத்தமான நீரை குடித்ததில் மூவர் உயிரிழந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட நால்வருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
யாத்கிர் மாவட்டம், சுரபுரா தாலுகாவின், திப்பனகி கிராமத்தில் சில நாட்களாக, அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இதை பயன்படுத்தும் மக்களின், உடல்நிலை பாதிக்கப்பட்டது. பலரும் வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்படுகின்றனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தேவிகம்மா ஹொட்டி, 60, வெங்கம்மா, 50, ராமண்ணா பூஜாரி, 64, ஆகியோர் நேற்று முன்தினம் முதல், அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மேலும் நால்வர் வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கிராமத்தினர் பாதிக்கப்பட்டதற்கு, அசுத்தமான குடிநீரே காரணம் என, மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தகவலறிந்து கிராமத்துக்கு வந்த சுகாதார அதிகாரிகள், அங்கன்வாடி மையத்தில் தற்காலிக சுகாதார மையம் அமைத்துள்ளனர். மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்துகின்றனர்.
குடிநீர் மாதிரியை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். யாத்கிர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சரண பசப்பா தர்சனாபுரா, நேற்று கிராமத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தார். குடிநீர் விநியோகிக்கும் இடத்துக்கு சென்று பார்வையிட்டார். மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
அமைச்சர் சரண பசப்பா கூறுகையில், “அசுத்த நீர் அருந்தியதால், மூவர் உயிரிழக்கவில்லை. நோய்களால் இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. குடிநீர் மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை வந்த பின்னரே, தெளிவாக தெரியும்,” என்றார்.