/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல்
/
3 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல்
ADDED : நவ 23, 2025 04:08 AM

பெங்களூரு: வேனில் இருந்து 7.11 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், போலீஸ் ஏட்டு உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஏட்டு உட்பட 3 பேரை, 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
பெங்களூரின் ஜே.பி.நகரில் உள்ள ஹெச்.டி.எச்.பி., வங்கியில் இருந்து, ஹெச்.பி.ஆர்., லே - அவுட்டில் உள்ள வங்கிக் கிளைக்கு, சி.எம்.எஸ்., என்ற நிறுவனத்திற்கு, சொந்தமான வேனில் 7.11 கோடி ரூபாய் 19ம் தேதி கொண்டு செல்லப்பட்டது. இந்த பணத்தை எட்டு பேர் கும்பல் கொள்ளையடித்தது. சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவானது.
6 மாநிலங்கள் இந்த கொள்ளை வழக்கு குறித்து போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
கொள்ளையர்களை கைது செய்து பணத்தை மீட்க டி.சி.பி., லோகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சி.சி.பி, மற்றும் 11 போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 200 பேர் பணியில் ஈடுபட்டனர். கர்நாடகா, கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கோவா ஆகிய ஆறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த வழக்கில், சி.எம்.எஸ்., நிறுவன வாகனங்களின் பொறுப்பாளர் கோபி, அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவியர், கோவிந்தபுரா போலீஸ் நிலைய ஏட்டு அன்னப்பா நாயக் ஆகிய 3 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 5.76 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.
சவால்கள் இந்த வழக்கில் சில சவால்கள் இருந்தன. கொள்ளையடித்த பின் பணத்தை எடுத்து கொண்டு காரில் தப்பியவர்கள், கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளில் பயணம் செய்தனர். மொபைல் பயன்படுத்தவில்லை. காரின் வாகன பதிவெண்ணை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தனர்.
ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரும் முறையாக இல்லை. ஆனாலும் தொழில்நுட்ப ஆதாரம், உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 3 பேரை கைது செய்தோம். வழக்கு தொடர்பாக 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார், சித்துாரில் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் இருந்த இரும்பு பெட்டிகளை, ஆந்திராவின் சித்துார் மாவட்டம், குப்பம் தாலுகா குர்மானிபள்ளி கிராம வனப்பகுதியில் வீசி உள்ளனர். அங்கிருந்து பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோபி, சேவியர் ஆகிய இருவரும் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். கொள்ளையடிக்க மூன்று மாதங்களாக திட்டம் தீட்டினர். 15 நாட்களாக கொள்ளையடித்து விட்டு எப்படி தப்பிச் செல்வது என்று ஒத்திகை பார்த்துள்ளனர்.
அலட்சியம் வாகன பொறுப்பாளர் கோபி, வாகனத்தில் எவ்வளவு பணம் உள்ளது என்று தகவல் கொடுத்துள்ளார். கொள்ளை நடந்த 54 மணி நேரத்தில் 3 பேரை கைது செய்தோம். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை முறைப்படி, வங்கியில் டிபாசிட் செய்வோம்.
வாகன டிரைவர்கள், ஊழியர்களை பணியில் அமர்த்தும் போதும், அவர்கள் பணியிலிருந்து நின்றால் தகவல் கொடுக்க வேண்டும் என்றும், ஏ.டி.எம்.,களுக்கு பணத்தை எடுத்துச் செல்லும் பணியை செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்துவோம். இந்த வழக்கில் சி.எம்.எஸ்., நிறுவனத்தின் அலட்சியமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மூவர் கைதான 3 பேரும் நேற்று மாலையில் பெங்களூரு 2வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று பேரையும் வரும் 1ம் தேதி வரை அதாவது 10 நாட்கள், போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
இதற்கிடையில் கொள்ளை கும்பலை சேர்ந்த, நவீன், நெல்சன், ரவி ஆகிய 3 பேரை, நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள லாட்ஜில் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக 6 கோடியே 43 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர்.

