/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்
/
அரசு பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்
ADDED : ஆக 26, 2025 03:10 AM
தேவனஹள்ளி: பெங்களூரு தேவனஹள்ளி அரசு பள்ளி கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூரு தேவனஹள்ளி டவுன் அரசு உயர் துவக்க ஆண்கள் பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டடம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நேற்று மதியம் உணவு வேளையின் போது மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரெ பள்ளி சுவர் இடிந்து விழுந்தது. இதில், புவன், 7, தர்ஷன், 14, குமார், 15, ஆகிய மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த கல்வி துறை, போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
பிளாக் கல்வி அதிகாரி லலிதாம்மா கூறுகையில், ''உணவு இடைவேளையின் போது, பள்ளியின் வெளிச்சுவர் இடிந்து, விளையாடி கொண்டிருந்த மூன்று மாணவர்களின் மீது விழுந்தது. படுகாயம் அடைந்த மாணவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,'' என்றார்.
அப்பகுதியினர் கூறுகையில், 'இப்பள்ளி கட்டடம் 2016ல் கட்டப்பட்டது. ஒன்பது ஆண்டுகளில் சுவர்களில் விரிசல் விட்டுள்ளது. நல்லவேளையாக சுவர் இடிந்த இடத்தில் அதிகமான குழந்தைகள் இல்லை. அரசு பள்ளி கட்டடத்தின் தரமற்ற பணியால், பெற்றோர் கவலை அடைந்து உள்ளனர். இங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர், கூலி வேலை செய்து வருகின்றனர். தரமற்ற பணி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.