ஐ.பி.எல்., கிரிக்கெட் பார்க்க எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 3 டிக்கெட்: து.முதல்வர் சிவகுமார் தகவல்
ஐ.பி.எல்., கிரிக்கெட் பார்க்க எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 3 டிக்கெட்: து.முதல்வர் சிவகுமார் தகவல்
ADDED : மார் 31, 2026 04:35 AM

பெங்களூரு: ''சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை காண, எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா மூன்று டிக்கெட்கள் வழங்க கே.எஸ்.சி.ஏ., சம்மதித்துள்ளது,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் துணை முதல்வர் சிவகுமாரை, கே.எஸ்.சி.ஏ., என்ற, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் பிரசாத், ஆர்.சி.பி., - சி.இ.ஓ., ராஜேஷ் மேனன் உட்பட பலர் சந்தித்தனர். பின், சிவகுமார் அளித்த பேட்டி:
சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை காண, எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா இரண்டு டிக்கெட் கேட்கப்பட்டிருந்தது. அவர்கள் மூன்று டிக்கெட்கள் தர முன்வந்து உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்த, கே.எஸ்.சி.ஏ., ஒப்பந்தம் போட்டுள்ளதால், அந்தப் போட்டிகளுக்கு இரண்டு டிக்கெட்டுகள் இலவசமாகவும், இரண்டு டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
டிக்கெட் வேண்டும் என கேட்போர், எங்களுக்கு கடிதம் அனுப்புங்கள், அதனை சபாநாயகருக்கு அனுப்பி, உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கிரிக்கெட் பார்க்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு தனி கேலரி வேண்டுமா என்பதை சங்கத்தினரிடம் விட்டு விட்டேன். நாம் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களாக இருக்கலாம். அவர்கள் கேட்ட சிறு உதவிக்கு, உள்ளூர் போட்டிகளை காண, மூன்று டிக்கெட் கிடைத்து உள்ளது. அதை தவிர்த்து, வேறு விஷயங்களில் தலையிட மாட்டேன்.
இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால், சர்வதேச கிரிக்கெட் போட்டியை காண இரண்டு டிக்கெட்டுகள் பெற்றுள்ளோம். மைதானத்தில் இருக்கைகள் அதிகப்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கி உள்ளேன்.
இதற்காக இரண்டு மூன்று இடங்களை அடையாளம் காண உள்ளோம். இன்று (நேற்று) காலை ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மகேஸ்வர் ராவை தொடர்பு கொண்டேன். புதிய மைதானம் கட்டுவது குறித்து விவாதித்தோம். தமிழகம் இருக்கை வசதிகளை அதிகரிப்பது போன்று, கே.எஸ்.சி.ஏ.,வும் அதிகரிக்க முன்வந்துள்ளனர். கூடுதலாக, 20 ஆயிரம் இருக்கைகள் அமைத்தால், ரசிகர்களுக்கு அனுகூலமாக இருக்கும்.
புதிய மைதானம் கட்ட துமகூரு, மைசூரில் இடங்கள் வழங்கி உள்ளோம். அதேபோன்று பெங்களூரில் இரண்டு அல்லது மூன்று நிலங்களை அடையாளம் கண்டு வருகிறோம். இந்த மைதானங்கள் எல்லாம், அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடத்த ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
... புல் அவுட் ...
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை காண, எம்.எல்.ஏ.,க்கள் டிக்கெட் கேட்பது சரியல்ல. கிரிக்கெட் பார்க்க விரும்புபவர்கள், காசு கொடுத்து பார்க்க வேண்டும். இது ஒன்றும் தேசிய விளையாட்டும் அல்ல. இது, வணிக விளையாட்டு மட்டுமே.
- டி.கே.சுரேஷ்,
தலைவர், பெங்களூரு பால் கூட்டுறவு சங்கம்
