சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 30 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 30 ஆண்டு சிறை
ADDED : மார் 08, 2026 05:15 AM
பெலகாவி: சிறுமியை கயிற்றால் கட்டி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெலகாவி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெலகாவி மாவட்டம் பி.கே.கக்ராலி கிராமத்தை சேர்ந்தவர் ருதேஷ் அனில் போஸ்லே, 22. அதே கிராமத்தை சேர்ந்த, 10 வயது சிறுமி, 2025 ஏப்ரல் 10ம் தேதி, தனியாக இருப்பதை கவனித்த ருதேஷ் அனில் போஸ்லே, லட்டு தருவதாக ஆசை காட்டி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
அதுமட்டுமின்றி, உன்னை பலாத்காரம் செய்ததை போன்று, உன் அக்காவையும் செய்வேன் என்று மிரட்டியதால், சிறுமி யாரிடமும் கூறவில்லை. மற்றொரு நாள் சிறுமியை, ருதேஷ் தனியாக அழைத்தார். ஆனால், சிறுமி வர மறுத்தார். கோபமடைந்த ருதேஷ், சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று, செங்கல்லால் அடித்து சித்ரவதை செய்தார். இதில், பலத்த காயமடைந்த சிறுமி, நடந்த விஷயத்தை பெற்றோரிடம் கூறினார்.
பெற்றோரும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் ருதேஷை கைது செய்தனர். விசாரணையை முடித்து, பெலகாவியின் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் ருதேஷின் குற்றம் உறுதியானதால், அவருக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி புஷ்பலதா நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்துக்கும் உத்தர விட்டார்.
