/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் 35 பேருக்கு கொரோனா... பாதிப்பு! பெங்களூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று
/
கர்நாடகாவில் 35 பேருக்கு கொரோனா... பாதிப்பு! பெங்களூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று
கர்நாடகாவில் 35 பேருக்கு கொரோனா... பாதிப்பு! பெங்களூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று
கர்நாடகாவில் 35 பேருக்கு கொரோனா... பாதிப்பு! பெங்களூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று
ADDED : மே 26, 2025 12:51 AM

கடந்த சில வாரங்களாக, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா பரவியது. நம் நாட்டிலும் கேரளா, மஹாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக, கடந்த 19ம் தேதி சுகாதாரத்துறை அறிவித்தது.
பெங்களூரில் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மக்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி பெங்களூரு, கலாசிபாளையாவில் உள்ள வாணி விலாஸ் மருத்துவமனையில் ஒன்பது மாத ஆண் குழந்தைக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டம், எல்லுார் பகுதியில் உள்ள கே.எல்.இ., மருத்துவமனையில், 25 வயது கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது.
முதல்வர் உஷார்
இந்த இரண்டு சம்பவங்களும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், யாரும் பயப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்தது. அதே சமயம் கடந்த 24ம் தேதி, மைசூரில் நடந்த இந்திரா கேன்டீன் திறப்பு விழாவில், முதல்வர் சித்தராமையா முக கவசத்துடன் கலந்து கொண்டார். இதுவும் பேசும் பொருளாக மாறியது. இச்சம்பவம் கொரோனா உண்மையிலே வேகமாக பரவுகிறதா என பார்ப்போர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது.
முதல் மரணம்
இந்நிலையில், பெங்களூரு ஒயிட்பீல்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 85 வயது முதியவர், உறுப்பு செயலிழப்பு, சுவாச கோளாறு காரணமாக கடந்த 17ம் தேதி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த செய்தியை கேட்டு பலரும் அச்சத்தில் உள்ள நிலையில், மாநிலத்தில் மொத்தம் 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்; இதில், பெங்களூரில் மட்டுமே 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:
'கோவிட் ஜே - 1' என்ற இந்த துணை வகை வைரஸ், எந்தவொரு கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தியதாக அறிக்கை எதுவும் இல்லை. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் கடுமையான பாதிப்புகள் இல்லை. அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது, முன்பு பரவியது போன்ற வீரியமிக்க தொற்று இல்லை. யாரும் பீதி அடைய வேண்டாம். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பரிசோதனை கட்டாயம்
சுவாச கோளாறு பிரச்னை உள்ளவர்கள், முதியவர்கள், கர்ப்பிணியர் கட்டாயமாக பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்றால் பாதிகப்பட்ட 85 வயது முதியவர் உயிரிழந்து உள்ளார். ஆனால், அவர் கடந்த ஒரு ஆண்டாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இருப்பினும், கொரோனா காரணமாக தான் இறந்தாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகத்தில் சோதனைகள் நடக்கின்றன. சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் சோதனை செய்து கொள்ளாலம். நிமான்ஸ் மருத்துவமனை, பெங்களூரு மருத்துவ கல்லுாரி, என்.ஐ.வி., மையம் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்வதற்கு ஒரு மாதத்திற்கு போதுமான கருவிகள் உள்ளன. 5,000 ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் இருப்பு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.