ADDED : செப் 04, 2026 03:46 AM
கலபுரகி: கிட்டங்கியில் அதிரடி சோதனை நடத்திய போலீஸ் அதிகாரிகள், பயனாளிகளுக்கு வழங்காமல் பதுக்கி வைத்த அரிசியை கண்டுபிடித்தனர். 35 குவின்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
'அன்னபாக்யா' திட்டம், ஏழைகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டம். இந்த திட்டத்தின் கீழ், பி.பி.எல்., ரேஷன்கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த அரிசி பயனாளிகளுக்கு வழங்காமல், கள்ளச்சந்தையில் விற்பதை உணவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.
அரிசி பதுக் கி வைக்கப்படும் இடங்களில், திடீர் சோதனை நடத்தி, டன் கணக்கில் அரிசியை பறிமுதல் செ ய்கின்றனர்.
கொப்பால், கதக் உட்பட, பல இடங்களில் அன்னபாக்யா அரிசி மீட்கப்பட்டது.
கொப்பாலில் இருந்து வெளிநாடுகளுக்கும் கூட அரிசி கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் அங்குள்ள கிட்டங்கியில் சோதனை நடத்திய போது, துபாய் முகவரி கொண்ட பைகளில், அரிசி பேக்கிங் செய்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
கலபுரகி மாவட்டம், ஜேவர்கி புறநகரில், கட்டடம் ஒன்றில் பெருமளவில் அன்னபா க்யா அரிசி பதுக்கி வைத்துள்ளதை, சமூக ஆர்வலர் மடிவாளப்பா கவனித்தார். இது குறித்து, ஜேவர்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து நேற்று முன் தினம், அங்கு சென்று சோதனையிட்ட போலீசார், அங்கிருந்த 35 குவிண்டால் அரிசியை பறிமுதல் செய்தனர். உணவுத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரிசியை பதுக்கி வைத்திருந்த நபர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்த சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையறிந்த அப்பகுதியினர், போலீஸ் நிலையத்தில் குவிந்து, அந்நபர்கள் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். போலீசாரும் சந்துரு, மாகேரி உட்பட, கொலை மிரட்டல் விடுத்த பலர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
