தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/விடியலுக்கு முன் விழிக்கும் விழிகள்: தினமலர் நாளிதழ் வினியோகிப்பவர் தினம்

விடியலுக்கு முன் விழிக்கும் விழிகள்: தினமலர் நாளிதழ் வினியோகிப்பவர் தினம்

விடியலுக்கு முன் விழிக்கும் விழிகள்: தினமலர் நாளிதழ் வினியோகிப்பவர் தினம்


ADDED : செப் 04, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 உழைப்பாளி


பாலவெங்கடேஷ், சுவர்ணா நகர், கே.ஜி.எப்.,

கே.ஜி.எப்., ஆங்கில இந்தியன் காலனியை சேர்ந்தவர் பாலவெங்கடேஷ், 62. தனது 15 வயதில் நாளிதழ்களை வீடு, வீடாக சென்று வினியோகிக்கும் 'பேப்பர் பாய்' வேலையை துவங்கினார். கடின உழைப்பின் ஊதியமாக 'ஏஜென்ட்'டாக உருமாறினார். தற்போது, 62 வயது. இந்த வயதிலும் அசராமல் உழைக்கிறார். வாடிக்கையாளர்களிடம் முதலில் 'காலை வணக்கம்' சொல்லிவிட்டு தான், நாளிதழை அவர்களிடம் கொடுப்பார்.

அதிகாலை 4:30 மணிக்கு எழும் அவர், தன் நீண்ட பயணம் குறித்து அவர் கூறியதாவது:

அதிகாலையில் துாய காற்றை சுவாசிக்க முடிகிறது. என் சிறுவயதில் சைக்கிளில் சென்று நாளிதழ் வினியோகிப்பேன். 10 கி.மீ., சைக்கிள் ஓட்டிச்செல்வேன்; தற்போது பைக்கில் செல்கிறேன். என்னிடம் 15 பேர் வேலை பார்க்கின்றனர்.மழை காலத்தில் அனைத்துமே கஷ்டமான நாட்கள் தான். யாராவது ஒருவர் லீவு எடுத்தால், அவர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டும். பல வாடிக்கையாளர்கள், தங்கள் பிள்ளைகளை நாளிதழ் படிக்க சொல்லி அறிவுறுத்துகின்றனர். இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். பேப்பர் படிப்பதில் கிடைக்கும் அறிவு, டிஜிட்டல் தளத்தில் கிடைப்பதில்லை. எனது குடும்பத்தினர் அனைவரும் உறுதுணையாக உள்ளனர். என்னுடைய மகன், மகள் ஐ.டி.,யில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு நாளிதழ் வினியோகிப்பதில் ஈடுபாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மனைவி:- சோமலதா, மகள்:- மேதா மகன்:- சுமந்த் கவுடா

ராமமூர்த்தி, 74, ெஜயந்தி நகர் (ெஹாரமாவு)

தன்னை வாழ வைத்த நாளிதழ் விநியோகஸ்தர் பணி குறித்து கூறியதாவது:

ஒளிவிளக்கு


எனக்கு இப்போது 74 வயது ஆகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள், நாளிதழ் விநியோகஸ்தர் பணியில் உள்ளேன். தமிழ், ஆங்கிலம், கன்னடா, தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியாகும் நாளிதழ்களை வினியோகம் செய்துள்ளேன். வாடிக்கையாளர்கள் எங்களுக்கு நல்ல மரியாதை தருவர். பெரும்பாலும் முதியவர்கள் தான் நாளிதழ்களை வாங்கி படிக்கின்றனர். இளைஞர்கள் சமூக வலை தளங்களில் ஆர்வமாக உள்ளனர். இருந்தாலும் எங்கள் வாழ்க்கையின் ஒளிவிளக்காக திகழ்ந்த நாளிதழ் வினியோகத்தை விடுவதற்கு மனமில்லை.

முன்பு சைக்கிளில் சென்று நாளிதழ்கள் விநியோகம் செய்தேன். இப்போது பைக்கில் செல்கிறேன். அதிகாலை 3:00 மணிக்கே பணிக்கு செல்கிறேன். மழை, குளிர், வெயில் என அனைத்தையும் பார்த்து விட்டேன். தினமும் 20 கி.மீ., துாரம் சென்று நாளிதழ் வினியோகிக்கிறேன். சரியான நேரத்திற்கு நாளிதழ் வினியோகம் செய்கிறீர்கள் என்று வாசகர்களிடம் இருந்து பல முறை பாராட்டு பெற்று உள்ளேன். இது நான் செய்யும் வேலைக்கு கிடைத்த பரிசு, வெகுமதி. சிரமங்கள் பார்க்காமலும், அதிகாலையில் துாக்கத்தை இழந்தும் நாளிதழ் வினியோகஸ்தர்கள் பணியாற்றுகின்றனர். எங்களுக்கு அரசிடம் இருந்து உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். மகள் வங்கியிலும், மகன் முரளி மெடிக்கல் துறையிலும் பணி செய்கின்றனர். முகேஷ் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.

இவ்வாறு மனம் நெகிழ்வுடன் கூறினார்.

மனைவி: கீதா,

மகன்கள்: முரளி, முகேஷ், மகள்: சுனிதா

குடும்பம் ஒரு கதம்பம்


கிருஷ்ணா, 60, வி.வி.புரம்

நான் 7 ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே, நாளிதழ் விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். எனது அப்பா லட்சுமணும் இதே வேலை செய்தார். வி.வி.புரம், கலாசிபாளையா, ஜே.சி.ரோடு, மாவள்ளி, சம்பங்கிராம்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 20 கி.மீ., துாரம் சைக்கிளில் சென்று, நாளிதழ் விநியோகிக்கிறேன்.

நாளிதழ்கள் படிப்பதில் பெரியவர்களிடம் இருக்கும் ஆர்வம் குறையவே இல்லை. ஆனால் இளம் தலைமுறையினரிடம் அந்த ஆர்வம் இல்லை. அவர்களும் படித்தால் நன்றாக இருக்கும். அது தான் என்னை போன்றோருக்கு ஊக்கம் அளிக்கும்.

யுகாதி உள்ளிட்ட ஒரு சில பண்டிகையின் போது தான், பத்திரிகை நிறுவனங்களுக்கு விடுமுறை இருக்கும். அப்போது தான் எங்களுக்கும், குடும்பத்துடன் வெளியே செல்ல முடியும். எனக்கு 1996 ல் திருமணம் ஆனது. அதற்கு முன்பு ஆண்டுதோறும், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு சென்று விடுவேன்.

திருமணத்திற்கு பின், குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பால் ஒரு நாள் விடுமுறையில், எங்கும் செல்ல முடிவது இல்லை. தர்மஸ்தலா செல்வதை விட்டு விட்டேன். எனக்கு திருமணம் நடந்த போது கூட, காலையில் நாளிதழ்கள் வினியோகம் செய்தேன். அது மறக்க முடியாத அனுபவம். ஒரு நாள் கூட விடுமுறை எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன். குடும்பத்தின் ஆதரவும் எனக்கு உள்ளது.

மனைவி: கீதா, மகள்கள்: யஷஸ்வினி, தேஜஸ்வினி, மகன் : மனோஜ் கவுடா

உழைப்புக்கு மரியாதை


வரதராஜன், 59, சூளை சர்க்கிள்

சென்டர் இன்சார்ஜ் - ஏஜென்ட்

நான், இந்த துறைக்கு வந்து 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாளிதழில் எனது பயணம், 'சென்டர் இன்சார்ஜ்' ஆக துவங்கியது. பின், ஏஜென்ட் ஆனேன். பிரிகேட் ரோடு, சஞ்சய்நகர், மத்திகெரே, ஆர்.டி.நகர், ஹெப்பால், கங்காநகர், முனிரெட்டி பாளையா பகுதிகளில் நாளிதழ் வினியோகம் செய்கிறேன்.

தினமும் காலை 3:30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு விடுவேன். மழை, வெயில், குளிர் பார்த்தது இல்லை. வாசகர்கள் கையில் குறிப்பிட்ட நேரத்தில் நாளிதழ் கிடைக்க வேண்டும், இது தான் எனது குறிக்கோள். இந்த வேலைக்கு வந்த பின், குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. கஷ்டப்பட்டு உழைத்தால் இந்த தொழில் பலன் தரும்.

இளம் தலைமுறையினரிடம் நாளிதழ் படிக்கும் ஆர்வத்தை துாண்ட, பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை பிரசுரிக்கலாம் என்பது எனது கருத்து. சில நேரங்களில் நாளிதழ்கள் எங்கள் கையில் கிடைக்க நேரம் ஆகிறது.

பின், பண்டல்களை பிரித்து ஏரியாக்களுக்கு அனுப்புவதற்குள் நேரம் ஆகிவிடுகிறது. வேக, வேகமாக பைக்கில் செல்ல வேண்டியுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றாலோ, ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ அபராதம் விதிக்கின்றனர். நிறைய கஷ்டங்களை சந்தித்து தான், இந்த தொழிலை செய்கிறோம். ஆனாலும் மனதிற்கு திருப்தியாக உள்ளது.

மனைவி: ஜெயலட்சுமி

மகள் : பிரியலட்சுமி, மகன்: பிரியரஞ்சன்

 ஆதவனுக்கு முன்னரே


எச்.கே.ரவி, 50, தொட்டகனஹள்ளி

பெங்களூரு தொட்டகனஹள்ளி நாளிதழ் வினியோகிப்பாளர் எச்.கே.ரவி, 50. இத்துறையில், 2000ம் ஆண்டு வந்தேன். தினமும் அதிகாலை 4:00 மணிக்கு என் சென்டருக்கு வந்துவிடுவேன்.

எங்களிடம் நாளிதழ் பெறுபவர்களை, எங்கள் குடும்பத்தினராகவே பாவிக்கிறேன். அதுபோன்று, என்னிடம் பணியாற்றுபவர்களையும் அப்படியே நினைக்கிறேன். வாடிக்கையாளர்கள், எங்களை மரியாதையுடன் நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதனால் நாளிதழ் விற்பனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று எண்ணம் மேலோங்கும். தினமும் 30 கி.மீ., துாரத்திற்கு நாளிதழ்கள் வினியோகிக்கின்றோம்.

வயதானவர்கள் நாளிதழ் படிப்பதை விடமாட்டார்கள். இரண்டு மணி நேரமோ அல்லது அரை நாட்கள் வரை படிக்கின்றனர். டிஜிட்டல் மயத்தால் குறைந்த அளவே பாதிப்பு இருந்தாலும், நாளிதழ் வினியோகத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுந்து, மழை, குளிர் என பார்க்காமல் வினியோகித்து வருகிறோம். எனவே, மற்ற தொழிலாளர்களுக்கு தேவையான சலுகைகளை அறிவிக்கும் அரசு, எங்களுக்கும் உதவ வர வேண்டும். உயிர் காப்பீடு வசதி செய்து தர வேண்டும். அதற்கான மாதாந்திர தொகையை, நாங்கள் செலுத்தவும் தயாராக இருக்கிறோம்.

எனக்கு ஒரே மகள் இருப்பதால், அவர் இத்தொழிலில் வர விரும்பவில்லை. ஆனால், என் மனைவியின் தம்பியான மைத்துனர் தீபக், 39,கை இத்தொழிலில் ஈடுபடுத்தி உள்ளேன்.

மனைவி: ரூபா, மகள்: கிருபா

 முதல் மனைவி


பி.பாண்டுரங்கன், 65, ஓல்டு போலீஸ் ஸ்டேஷன், ஸ்ரீராமபுரம்

நாளிதழ் வினியோகிக்கும் பணியில், 1982 ம் ஆண்டில் இருந்து இருக்கிறேன். ராஜாஜிநகர் 1 முதல் 6 வது பிளாக் வரை; மஞ்சுநாத்நகர், சிவனஹள்ளி, பிரகாஷ்நகர், ஸ்ரீராமபுரம், ராமசந்திரபுரம் ஏரியாக்களில் நாளிதழ் வினியோகம் செய்கிறேன்.

எனது 22 வயதில் சைக்கிளில் சென்று நாளிதழில் வினியோகம் செய்தது, இன்று வரை மறக்க முடியாத நினைவாக உள்ளது. நாளிதழ் நிறுவனங்களிடம் எனக்கு நல்ல பெயர் உள்ளது. எனக்கு நிறைய முன்னுரிமை கொடுக்கின்றனர். வாசகர்களும், தங்கள் வீட்டில் ஒருவராக நினைக்கின்றனர்.

நான் தமிழர் என்றாலும், கன்னடம் பேசுவோர் என்னிடம் நன்றாகவே பழகுகின்றனர். உலக செய்திகள் இருக்கும் நாளிதழை சுமந்து செல்வதே சிறப்பு தான்.

இந்த தொழிலுக்கு வந்ததில் இருந்து ஒரே ஒரு நாள் மட்டும் தான், என்னால் நாளிதழ்களை எடுக்க முடியவில்லை. மற்ற நாட்களில் எடுத்து உள்ளேன். எனது மகன்கள் உதவியாக உள்ளனர். எனது முதல் மனைவி, நாளிதழ்கள் தான். நாளிதழ்களை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு சேவை செய்கிறோம் என்று மனதிருப்தி உள்ளது.

முன்பு எல்லாம் சைக்கிளில் சென்று நாளிதழ் வினியோகம் செய்தோம். இப்போது பைக்கிற்கு மாறி விட்டோம். பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. இதனை எல்லாம் அரசு கருத்தில் கொண்டு உதவலாம். இந்த வேலை எனக்கு மனநிறைவு தருகிறது. என்னால் முடிந்தவரை உழைப்பேன்.

மனைவி: ருக்மணி, மகன்கள்: சந்தீப், பாரி

 வாழ்க்கையின் வழிகாட்டி


நாகராஜ், 44, அத்திகுப்பே

எனது 16வது வயதில் இருந்து, அதாவது, 1996 முதல் நாளிதழ் வினியோகிக்கும் பணியில் இருந்து வருகிறேன். மக்கள் உறங்கும் போது நாளிதழ் விநியோகிப்பதை சேவையாக கருதுகிறேன். நாட்டின் நடக்கும் சம்பவங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் ஆர்வம் கொள்வர்.

என் தந்தை, கட்டட பணியில் பணியாற்றி வந்தார். என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் முனனுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். சிறிய வயதிலேயே, என் தந்தை, இத்துறைக்கு அழைத்து சென்றார். நாளிதழ்களை வினியோகிப்பதால் புதுப்புது மக்களை சந்திப்பதற்கும், அவர்களுடன் பழகுவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

சைக்கிளில் 1998 ல் இருந்து 2011 வரை நாளிதழ்கள் விநியோகித்தேன். என்னை பொருத்தவரை, நாளிதழ்களுக்கு அழிவில்லை. ஆனாலும் இன்றைய சமுதாயத்தினர் மொபைல் போனில் மூழ்கிவிட்டனர். இதனால் கண் பாதிப்பு ஏற்படும்.

நாளிதழ் வினியோகிக்கும் நாங்கள், பர்சனல் லோன், ஹோம் லோன் வாங்க வங்கிக்கு சென்றால், ஆதாரம் என்ன உள்ளது என்று கேட்கின்றனர். எனவே, எங்களை போன்றோருக்கு காப்பீடு திட்டம், குழந்தைகளின் கல்விக்கு உதவிகளை செய்ய வேண்டும்.

தொழிலில் என் குழந்தைகளும் ஈடுபட விரும்புகிறேன். இதனாலேயே எங்கள் வாழ்க்கை நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக தினமும் என்னுடன் என் மகன் 'பேப்பர் சென்டர்'க்கு வருகிறார்.

மனைவி வரலட்சுமி

மகன்: குரு சரண், மகள்: யோகிதா



கடைக்கண் பார்வை


வெங்கடேஷ் பாபு, 65, மைசூரு கே.ஆர்.சர்க்கிள்

மைசூரு சர்க்கிள் பகுதியில் நாளிதழ் வினியோகிப்பாளர் வெங்கடேஷ் பாபு. கடந்த 1975 முதல் இத்துறையில் பணியாற்றி வருகிறார். எங்களிடம் நாளிதழ் பெறுவோர் அனைவரும், எங்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவிக்கின்றனர். நாளிதழில் முக்கியமான செய்திகள் வெளியாகும்போது, ஆர்வமுடன் வாங்கி படிப்பர்.

என்னுடன் நாளிதழ் வினியோகிக்கும் பணியில் ஈடுபடுவோர், பணிக்கு வரவில்லை என்றால், நானே வீடுவீடாக சென்று வினியோகிப்பேன். இதனால் எனக்கு மன திருப்தி ஏற்படுகிறது. தினமும் 5,000 நாளிதழ்கள் வினியோகிக்க, 30 கி.மீ., பயணிக்கிறோம்.

முன்னர் நாளிதழ் படிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது, நாளிதழ் படிக்கும் எண்ணிக்கை குறைந்து விட்டது. சமூக வலை தளங்களில் பார்ப்பதாக கூறுகின்றனர். என்ன தான் இருந்தாலும், நாளிதழில் பக்கம், பக்கமாக படிக்கும் ஆர்வம், வலை தளங்களில் பார்க்கும் போது கிடைக்காது.

அரசு துறைகளில் நாளிதழ்கள் வாங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாளிதழ் வினியோகிப்பவர்கள் அனைவருக்கும் சலுகை கிடைப்பதில்லை. இதை அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்தும் இப்போது டிஜிட்டல் மயமானதால், இத்தொழிலில் வர பிள்ளைகள் விரும்புவதில்லை. நானும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை.

மனைவி: சந்தியா

மகள்கள்: நாகஸ்ரீ, தனுஸ்ரீ

 என் வழி நேர் வழி


ராமகிருஷ்ணா, 62, அரிகெரே கேட்

பெங்களூரு 'அரிகெரே கேட்' நாளிதழ் வினியோகஸ்தர் ராமகிருஷ்ணா, 62. தமிழகம் ஓசூர் - கிருஷ்ணகிரி இடையே உள்ள சூளகிரியை சேர்ந்தவர்.

நாளிதழ் வினியோகம் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

நாங்கள், 1978 ல் குடும்பத்துடன் பெங்களூரு வந்தோம். இங்கு பி.எஸ்.என்.எல்.,ல் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தேன். காலை நேரத்தில் ஏதாவது செய்யலாம் என்ற போது, வேறொரு நாளிதழ் வினியோகிப்பவரிடம் மாதம் 30 ரூபாய் சம்பளத்துக்கு 'பீட் பாய்'ஆக பணியாற்றினேன். படிப்படியாக முன்னேறி, 1983ல் 'ஆர்.கே., நியூஸ் ஏஜென்சி' என தனியாக நடத்த துவங்கினேன். அப்போதெல்லாம், காலை நேரத்தில் நாளிதழ் விநியோகித்த பின், சைக்கிளில் ஏரியாவை சுற்றி வருவோம். புதிதாக யாராவது வீட்டுக்கு குடிவருபவர்களின் வீட்டு சாமான்களை நாங்களே கீழே இறக்கி உதவி செய்வோம். அதன் மூலம் நாளிதழ் சந்தா பிடிப்போம். பன்னரகட்டா சாலையில் ஐ.ஐ.எம்., எனும் இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட் துவங்கியது. அப்போது பல பகுதிகள் உருவாகவில்லை. தினமும் ஐந்து கி.மீ., துாரம் பேப்பர் வினியோகிப்பேன். இப்பணி முடிந்ததும், வீட்டுக்கு சென்று சமையல் செய்து கொண்டு, மீண்டும் பி.எஸ்.என்.எல்.,க்கு சென்றுவிடுவேன்.

மழை காலத்தில் இளைஞர்கள் கிடைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இந்நேரத்தில் நானே நாளிதழ்களை விநியோகிப்பேன். எந்த வேலையாக இருந்தாலும் சரி, 'திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது' என்பதில் உறுதியாக இருந்தேன்.

என் பிள்ளைகள் வேறொரு பிசினஸ் செய்கின்றனர்.

மனைவி: சரோஜா,

மகள்: ஸ்நேகா, மகன்கள்: சாகர், சுஜய்

 மன நிறைவு


சி.எஸ்.ராமசந்திரா, 47, நாகரபாவி

கடந்த 25 ஆண்டுகளாக நாளிதழ் வினியோகம் செய்கிறேன். விஜயநகரில் நாளிதழ் விற்பனையாளராக துவங்கிய எனது பயணம், டீலராக என்னை உயர்த்தியுள்ளது.

தினமும் 700 நாளிதழ்களை, வாசகர்களுக்கு வினியோகம் செய்கிறேன். காலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை பணி செய்கிறேன். சரியான நேரத்தில் நாளிதழ்கள் கையில் கிடைக்க வேண்டும் என வாசகர்கள் நினைக்கின்றனர். இதில் எந்த தவறும் இல்லை.

அவர்களுக்காக நாம் சேவை செய்கிறோம். இந்த தொழில் எனது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவியுள்ளது.

ஆனால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிவது இல்லை. இந்த தொழில் மூலம் நிறைய வாசகர்கள் அன்பை பெற்று உள்ளேன். சவால்கள் அதிகம் என்றாலும், இந்த வேலை செய்வதில் ஆத்ம திருப்தி உள்ளது.

நாளிதழ் வினியோகம் செய்து கொண்டே, நாகரபாவியில் உள்ள பஞ்சமி சட்ட கல்லுாரியில் எல்.எல்.பி.,யும் படித்தேன். நாளிதழ் விநியோகம் செய்த பின், சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு சென்று, மூத்த வக்கீலிடம் உதவியாளராக பணியாற்றுகிறேன்.

கல்லுாரியில் படிக்கும் போது, முதல்வர் வித்யா, பேராசிரியர்கள் எனக்கு உதவியாக இருந்தனர். எனக்காக நிறைய உதவி செய்தனர். அவர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

மனைவி : சரிதா, மகள் : ஹிதாஸ்ரீ, மகன் : தோஷிக் கவுடா

விடியலின் தூதர்கள்


முகுந்தையா, 48, மாரத்தஹள்ளி

பெங்களூரு மாரத்தஹள்ளி, எச்.ஏ.எல்., மார்க்கெட், பசவநகர், ஜி.எம்.பாளையா பகுதிகளில் நாளிதழ்களை விநியோகித்து வரும் முகுந்தையா, 48. 1998 ல் இருந்து இத்துறையில் பணியாற்றி வருகிறார்.

அவர் கூறியதாவது:

மக்கள் துாங்கும் போது, நாங்கள் 'பேப்பர்' என கூறியபடி பேப்பர் போடும் 'இரவு பக் ஷி'யாக மாறிவிடுகிறோம். ஒரு பேப்பரோ அல்லது இரண்டு பேப்பரோ, ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் எங்களுக்கு முக்கியம் தான்.அவர்களையும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறோம். என் பெற்றோர் இறந்த நேரத்திலும் கூட, காலையில் நாளிதழ்களை விநியோகித்த பின்னரே, இறுதி காரியத்தில் பங்கேற்றேன். ஆனால் என் திருமணத்தின் போது, திருமண நாளில் வெளியே செல்லக்கூடாது என பெரியவர்கள் கூறியதால், அன்று ஒரு நாள் மட்டும் செல்லவில்லை.

முதலில் வேறொருவரிடம் நாளிதழ் எண்ணி கொடுத்தேன். வெண்டர், டீலரானேன். தினமும் 35 கி.மீ., சைக்கிள், பைக்கில் சென்று நாளிதழ் விநியோகித்து வருகிறேன். என்ன தான் டிஜிட்டல் என்றாலும், அதனால் பலனை விட, தீமையே அதிகம். நாளிதழை பார்த்தால், பல நாள் அது ஞாபகத்தில் இருக்கும். நாளிதழ் விநியோகிப்போருக்கு சுகாதார காப்பீடு, பி.பி.எல்., கார்டு வழங்க வேண்டும்.

என் தந்தை விவசாயி. என் 16 வயதில் இருந்து பேப்பர் பீல்டுக்கு வந்தேன். என் மனைவி கங்காம்பிகே. ஒயிட்பீல்டு, காடுகோடி பகுதியில் ரக் ஷா நியூஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனைவி: கங்காம்பிகே

மகள்: ரக் ஷா, மகன்: சசிதர்கவுடா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us